நெல்லை – இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து அனைத்துலக விசாரணை தேவை என மலேசியா பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திலுள்ள திருப்பூரில் நடைபெற்ற மதிமுக மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியாவில் உள்ள பினாங்கு மாகாணத்தின் துணை முதல்வர் ராமசாமி தலைமையில் பினாங்கு தமிழ்ச் சங்கத் தலைவர் முனுசாமி வீர சிங்கம், டேவிட்சன், செல்வி பழனிச்சாமி, பரமசிவம் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவினர் வந்திருந்தனர். அம்மாநாடு முடிந்த பிறகு அவர்கள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்குச் சென்றனர்.
அவர்களுக்குக் கலிங்கப்பட்டி ஊர்ப் பொதுமக்கள் வாண வேடிக்கை முழங்க மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கலிங்கப்பட்டியில் வைகோவின் வீட்டிற்கு முன்பு தற்காலிக மேடை அமைத்து அதில் பெரியாரின் உருவப்படத்தை வைத்திருந்தனர்.பெரியாரின் உருவப் படத்துக்குப் பினாங்கு துணை முதல்வர் ராமசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது: “தமிழகத்தில் இன்றைக்கு அடித்தட்டு மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தந்தை பெரியார் செய்த சேவைகள் தான்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலைகள் குறித்து ஐநா அறிக்கையில் முகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே,இலங்கைப் படுகொலை குறித்துக் கண்டிப்பாக அனைத்துலக விசாரணை வேண்டும்.
இலங்கைமீதான அனைத்துலக விசாரணையை நடத்தக்கோரி தீர்மானம் கொண்டு வர பினாங்கில் நவம்பர் 26, 27, 28-ஆம் தேதிகளில் ஒரு பயிலரங்கம் நடத்தவுள்ளோம். அதில் ஈழத் தமிழர்கள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்.
ஈழத்தில் தமிழர் படு கொலை செய்யப்பட்டது தொடர்பாக அனைத்துலக விசாரணைக்கு உத்தரவிடக் கோரித் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதற்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி” என்றார் அவர்.