அகமதாபாத் – குஜராத்தில் இட ஒதுக்கீட்டு கேட்டுப் போராடி வரும் படேல் இனத்தலைவர் ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள பட்டேல் சமூகத்தினர் தங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி ஹர்திக் படேல்(வயது 22) என்ற இளைஞர் தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 25-ம் தேதி குஜராத்தில் இவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்து 8 பேர் உயிரிழந்தனர்.ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தி போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.எனினும், பதற்றம் தணியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், இன்று இட ஒதுக்கீடு கோரி ஈக்தா யாத்ரா என்ற போராட்டத்தை நடத்துவதற்கு ஹர்திக் படேல் திட்டமிட்டிருந்ததார். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி, போராட்டத்துக்கு அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இருப்பினும், தடையை மீறிப் பேரணி நடத்தப்படும் என்று ஹர்திக் படேல் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து இன்று சூரத்தில் உள்ள காவல்நிலையத்தைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் ஹர்திக் பட்டேல் உள்ளிட்ட 78 பேரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.