புதுவை – அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை என்பதை அதிமுகவும், புதுவை முதல்வர் இரங்கசாமி (படம்) தலைமையிலான என்.ஆர்.காங்கிரசும் நிரூபித்துள்ளன. புதுவையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்தது முதல் எலியும் பூனையுமாகச் செயல்பட்டு இரு கட்சிகளும் அம்மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலையொட்டி யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென கைகோர்த்துள்ளன.
புதுவையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரசும், அதிமுகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் மொத்தம் உள்ள 30 இடங்களில் என்.ஆர்.காங்கிரஸ் 15 இடங்களைக் கைப்பற்றியது. அதிமுக 5 இடங்களிலும், சுயேட்சை ஓரிடத்திலும், திமுக உள்ளிட்ட கட்சிகள் மீதமுள்ள இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஆனால் அமைச்சரவையில் பங்கேற்க அதிமுகவை இரங்கசாமி அனுமதிக்கவில்லை. இதனால் தேர்தல் முடிந்ததுமே அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.
சுயேட்சை உறுப்பினரின் ஆதரவோடு இரங்கசாமி ஆட்சியமைத்தார். இதையடுத்து முதல்வர் இரங்கசாமி கூட்டணி தர்மத்துக்கு எதிராகச் செயல்பட்டதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில், அங்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் தொழிலதிபர் கோகுலகிருஷ்ணன் (படம்) என்பவரை நிற்க வைக்க முடிவு செய்தார் ரங்கசாமி. ஆனால் அவரது சொந்தக் கட்சியிலிருந்தே 5 எம்.எல்.ஏ.,க்கள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பினர். அவர்களின் ஆதரவின்றி கோகுலகிருஷ்ணன் வெற்றி பெற முடியாத நிலையில், அரசியல் சதுரங்கத்தில் சாதுரியமாக காய்களை நகர்த்தினார் இரங்கசாமி.
நேற்று வரை முறைத்துக் கொண்டிருந்த அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், 5 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை உறுதி செய்து கொண்டார். இதையடுத்து தொழிலதிபர் கோகுலகிருஷ்ணன் திடீரென அதிமுகவில் இணைய, அவரே அக்கட்சியின் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
என்.ஆர்.காங்கிரஸ் உதவியோடு, முதல்வர் ரங்கசாமியின் அரசியல் வியூகப்படி கோகுலகிருஷ்ணன் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. எதிர்வரும் 28ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் அதிகாரபூர்வமாக கோபாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஆக, அரசியலில் அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் போலும்! காலையில் அதிமுக உறுப்பினராகச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன், அன்று மதியமே நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் இடையேயான இந்த திடீர் உறவு அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை தொடருமா என்பது தெரியவில்லை. எனினும் ஜெயலலிதாவின் கண்ணசைவின்றி மேற்குறிப்பிட்ட விஷயங்கள் நடந்திருக்காது என்பதால், புதுவையில் இரு கட்சிகளும் மீண்டும் இணைந்து செயல்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
எது எப்படியோ, ஆட்சியில் பங்கு கொடுக்காமல், ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளான இரங்கசாமி, தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுகவுக்கு அளித்து பிராயசித்தம் தேடிக் கொண்டதாக அரசியல் பார்வையாளர்கள் விமர்சிக்கிறார்கள்.
-செல்லியல் தொகுப்பு