அலோர்ஸ்டார்- கடந்த 17-ம் தேதி முதல் பரவி வரும் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்தவும், முற்றிலுமாகத் துடைத்தொழிக்கவும் சுகாதாரத்துறை அமைச்சு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், 18 புதிய நாய்க்கடிச் சம்பவங்கள் கெடா சுகாதாரத்துறையிடம் பதிவாகி உள்ளன.
கடந்த 20-ம் தேதி வரை இச்சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக மாநில சுகாதாரத்துறை இயக்குநர் டத்தோ நோர்ஹிசான் இஸ்மாயில் தெரிவித்தார்.
“கோத்தா செதாரில் 2, கோல மூடாவில் 3, கூலிமில் 3, குபாங் பாசுவில் 6, பாடாங் டெராப், பண்டார் பஹாருவில் தலா ஒன்று, லங்காவியில் 2 நாய்க்கடிச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மொத்தம் 17 நாய்களால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.
“ரேபிஸ் பாதிப்புள்ள நாய்கள் மூலம் கோத்தா செதாரைச் சேர்ந்த கணவன், மனைவி பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் 22-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மனிதர்கள் யாரும் இந்த நோயால் பாதிக்கப்படவில்லை,” என்றார் நோர்ஹிசான்.
ரேபிஸ் நோய்க்கு எதிராக சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
“வளர்ப்பு நாயோ, தெரு நாயோ, எது கடித்தாலும் உடனடியாக சிகிச்சை பெற வேண்டியது அவசியம்,” என்று நோர்ஹிசான் மேலும் வலியுறுத்தி உள்ளார்.