புத்ராஜெயா – தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஷா ஆலம் பகுதியில் 2 காலி மனைகளையும் (நிலமும்), ஒரு பங்களா வீட்டையும் முறைகேடாக வாங்கியது தொடர்பான வழக்கில், சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் டாக்டர் முகமட் கிர்தோயோவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கூட்டரசு நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கிர்தோயோ இறுதி முறையீட்டைச் செய்திருந்தார். அதை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
மந்திரி பெசாராக பதவி வகித்தபோது கிர்தோயோ இந்தக் குற்றத்தைச் செய்தது சந்தேகமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற ஒருமித்த கருத்தின் அடிப்படையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அவரது மனுவை தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு உறுதி செய்வதாகவும், உயர்நீதிமன்ற நீதிபதி தமது தீர்ப்பை எதிர்க்கும் வகையில் எந்தவித தவறையும் செய்யவில்லை என்றும் கூட்டரசு நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
6.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பு கொண்ட மேற்குறிப்பிட்ட சொத்துக்களை, கிர்தோயோ தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி 3.5 மில்லியன் தொகைக்கு பெற்றார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு ஆகும்.
இதையடுத்து, அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 12 மாத சிறைத்தண்டனை விதித்தது. தண்டனையை ரத்து செய்யக் கோரிய அவரது இறுதி மனுவும் தள்ளுபடியான நிலையில், கிர்தோயோ எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.