சென்னை – திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் ‘அட்டாக்’ பாண்டி, நேற்றைய விசாரணையின் போது முக்கிய பிரமுகர் ஒருவரின் பெயரைக் கூறி, “எல்லா விவரங்களும் அவருக்குத் தெரியும்” என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அவர் குறிப்பிடும் அந்த முக்கியப் பிரமுகர் யார் என்ற பரபரப்பு தற்போது திமுகவில் தொற்றிக் கொண்டுள்ளது. அதற்கு காரணம், ‘பொட்டு’ சுரேஷும், ‘அட்டாக்’ பாண்டியும் திமுகவில் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல், ‘பொட்டு’ சுரேஷ் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக திமுக பொருளாளர் ஸ்டாலினை சந்தித்ததாகவும் பத்திரிக்கைகளில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், இந்த வழக்கு தொடர்பாக ஸ்டாலின் விசாரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பிரச்சாரப் பயணத்தை முடக்குவதற்காக இத்தகைய சதிவலையை ஆளும் கட்சி விரித்து இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
இது பற்றி காவல்துறையினர் கூறுகையில், “அட்டாக் பாண்டியிடம் இதுவரை எத்தகைய வாக்குமூலமும் வாங்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.