சென்னை – சட்டசபையில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அவ்விவாதத்தின் போது முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:
திமுக சட்டமன்ற உறுப்பினர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகத் தனது முகநூலில் பொத்தாம் பொதுவாகப் பதிவு செய்துள்ளார். அது அவரது கருத்துதானா? அல்லது அதைப் பராமரிப்பவரின் கருத்தா என்பது தெரியவில்லை.
31.1.2013 அன்று இரவு 8 மணிக்குத் திமுக-வைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்ற பொட்டு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டார். சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் கொலையாளிகளைக் கைது செய்திருந்தனர்.
இதில் முக்கிய குற்ற வாளியான பாண்டி என்ற அட்டாக் பாண்டி தலைமறைவாக இருந்தார். தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். 7 பிடிவாரண்டும் அவர் மீது உள்ளது.
அவரைக் கைது செய்ய தமிழகக் காவல்துறையினர் தொடர் முயற்சி மேற்கொண்டு, மும்பை புறநகர் பகுதியில் அவர் பதுங்கி இருப்பதை அறிந்து அவரைச் சுற்றி வளைத்து நேற்று கைது செய்துள்ளனர்.
இதில் சிறப்பாகப் பணியாற்றி அட்டாக் பாண்டியைக் கைது செய்த தமிழகக் காவல்துறையினரின் பணி பாராட்டுக் குரியது.
எனது தலைமையிலான அரசின் அறிவுரைப்படி சட்டம் ஒழுங்கு சீரிய முறையில் பராமரிக்கப்படுகிறது என்பதைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
கடந்த 4 ஆண்டில் குற்றங்கள் குறைந்துள்ளது. குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சியினர் கூறுவது தவறானது” என்றார்.