புத்ரா ஜெயா,மார்ச் 12 -மலேசிய வர்த்தக சம்மேளனங்களும், வர்த்தக சங்கங்களும் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து அதன் தலைவர் டத்தோ கே.கே.ஈஸ்வரன் தலைமையில் சுமார் 40 பிரதிநிதிகள் அடங்கிய குழு நேற்று மாலை துணைப்பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசினைச் சந்தித்து கலந்துரையாடினார்கள். அதோடு அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மகஜராகத் தொகுக்கப்பட்டு துணைப்பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்த 11 அம்சக் கோரிக்கைகள் பின்வருமாறு:
1. தனி மனித, வர்த்தக நிறுவனங்களின் வரியை மறுபரிசீலனை செய்தல்.
2. இந்தியத் தொழில் முனைவர்களுக்குச் சிறப்பு நிதி ஒதுக்கீடு
3. குத்தகையாளர்களுக்கு ‘எப்’ தகுதி உரிமம் வழங்குதலும், அரசாங்கக் குத்தகையில், திட்டங்களில் வாய்ப்பளித்தலும்
4.அரசாங்கத் தொடர்பு நிறுவனங்களில், வணிகர் முன்னேற்றத் திட்டங்களுக்கு மலேசிய இந்திய வர்த்தகர்களைப் பதிவு செய்தல்
5. உள்ளூர் நகரச்சபையில் மைக்கி அங்கத்தினர்களின் பிரதிநிதித்துவம்
6.அரசாங்கத் தொடர்பு நிறுவனங்களில் மலேசிய இந்திய இயக்குனர்களின் பிரதிநிதித்துவம்
7. நாடாளுமன்றத்தில் இந்திய வர்த்தகர்களின் பிரதிநிதித்துவமும், பல்வேறு அரசாங்க நிறுவனங்களில் மைக்கியின் பிரதிநிதித்துவமும்
8. பல்வேறு மத்திய, மாநில, நகரசபை நிறுவனங்களில் குத்தகையும், உரிமமும் வழங்குதல்
9. தொழித்துறை வழக்கமுறைகளும், போட்டிநிலை குறித்த திட்டங்களும்
10. மலேசிய அரசாங்கப் பணிகளில், அரசு தொடர்பு நிறுவங்களில் வேலை வாய்ப்பு
11. இந்திய வர்த்தகர்களுக்கு வேலையாட்களை நியமிப்பதில் குடிநுழைவுத்துறை ஒழுங்குமுறைகளைச் சரிப்படுத்துதலும், திருவிழாக் காலங்களில் இந்தியத் தொழில் கண்காட்சியில் வெளிநாட்டினர் வியாபாரம் செய்தலும் போன்ற 11 அம்சக் கோரிக்கைகள் அந்த மகஜரில் இடம்பெற்றிருந்தன.
மேலும் துணைப்பிரதமருடனான சந்திப்பு பற்றி டத்தோ கே.கே ஈஸ்வரன் கூறுகையில், துணைப்பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பு மிகவும் பயனளிக்கும் வகையில் அமைந்ததாகவும், சொல்லப்பட்ட பிரச்சனைகளைத் துணைப்பிரதமர் அக்கறையோடு கேட்டதாகவும் தெரிவித்தார்.