கோலாலம்பூர் – மலேசியா தேசிய வர்த்தகத் தொழிலியல் சங்கம் (National Chamber of Commerce and Industry of Malaysia – NCCIM) என்பது மலாய்க்காரர், இந்தியர் மற்றும் சீன தொழிலியல் சங்கங்கள் ஒன்று சேர்ந்து இயக்கப்படும் ஒரு சங்கமாகும். தேசிய அளவில் இச்சங்கம் அனைத்து வர்த்தகர்களின் மேம்பாட்டிற்கு அரசாங்கத்திடம் தொடர்ந்து பல பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இதன் தற்போதைய தலைவராக டான்ஸ்ரீ தேர் லியோங் யாப் பணியாற்றி வருகிறார்.
இந்த ஆண்டு சீன பெருநாளை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி காலை 9 மணி முதல் விஸ்மா சைனிஸ் சேம்பர் (Wisma Chinese Chamber) எனும் இடத்தில் சீன பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பை மலேசியா தேசிய வர்த்தகத் தொழிலியல் சங்கம் மிக விமரிசையாக கொண்டாடவுள்ளது.
இவ்விழாவிற்கு நமது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் பின் முகமட், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா பிந்தி வான் இஸ்மாயில், நிதி அமைச்சர் லிம் குவான் எங், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் இதர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவரும், தேசிய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் உதவித் தலைவருமாகிய டத்தோ ந.கோபாலகிருஷ்ணன், மலேசிய இந்திய மக்களை இவ்விழாவினில் கலந்து சிறப்பிக்க பணிவன்போடு அழைப்பு விடுத்துள்ளார்.
இம்மாதிரியான நிகழ்வுகளுக்கு நாம் மலேசியர்களாக கலந்து சிறப்பித்து, சீன மற்றும் மலாய் நண்பர்களுடன் நட்புறவை மேம்படுத்துவோம். பெருநாள் காலங்களில் நமது பிள்ளைகளுக்கு ஒற்றுமையின் மகத்துவத்தை கற்பிப்போம் என அவர் கேட்டுக் கொண்டார். மக்கள் இந்நிகழ்வுக்கு திரளாக வந்து ஆதரவு தரும்படி அவர் அன்புடன் கேட்டுக் கொண்டார். மேலும் சீனப் பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் அவர் தனது பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.