Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியத் தொழில் முனைவர்கள் வளர்ச்சிக்கு மைடா உதவும்

இந்தியத் தொழில் முனைவர்கள் வளர்ச்சிக்கு மைடா உதவும்

1209
0
SHARE
Ad
rajendran-datuk-deputy ceo-MIDA
டத்தோ என்.இராஜேந்திரன் – மைடாவின் துணை தலைமைச் செயல் அதிகாரி

கோலாலம்பூர் – மைடா (MIDA-Malaysian Industrial Development Authority) என அழைக்கப்படும் மலேசியத் தொழில்துறை  மேம்பாட்டு நிறுவனம் அரசாங்கத்தின் துணை அமைப்பாக அனைத்துலக வாணிப மற்றும் தொழில் துறை அமைச்சின் கீழ் கடந்த 50 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இந்தியத் தொழில் முனைவர்கள் பலர், குறிப்பாக சிறிய, நடுத்தர தொழில் வணிகர்கள் மைடா குறித்த முழுமையான விவரங்களையும், மலேசியத் தொழில் முனைவர்களுக்கு மைடா வழங்கி வரும் ஆதரவு, ஊக்குவிப்பு ஆகிய அம்சங்கள் குறித்தும் இன்னும் தெரிந்து கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

அண்மையில் இந்தியப் பத்திரிக்கையாளர்களுடன் நடத்திய சந்திப்புக் கூட்டத்தில் இந்த நிலவரத்தைச் சுட்டிக் காட்டிய மைடாவின் துணைத் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ என்.இராஜேந்திரன், இதனை நிவர்த்திக்கும் பொருட்டு மைடா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும், வழங்கி வரும் சேவைகள் குறித்தும் விரிவான விளக்கங்கள் அளித்தார்.

MIDA-OUTLINE-LOGOமைடா குறித்த தகவல்களை ஊடகங்கள் இந்திய வணிகர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும், மைடாவின் நடவடிக்கைகள் குறித்து இந்திய தொழில் முனைவர் இயக்கங்களும் தங்களின் உறுப்பினர்களின் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் இராஜேந்திரன் கேட்டுக் கொண்டார்.

மைடா – சில பின்னணிகள், தகவல்கள்

#TamilSchoolmychoice

நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் உள்நாட்டு நிறுவனங்களின் பங்கு மிக முக்கியம் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. உதாரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்கள் வரை 3,886 திட்டங்கள் மூலம் 113.5 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய முதலீடுகளை மலேசியா பெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட 73.5 விழுக்காடு உள்ளூர் நிறுவனங்களின் மூலம் பெற்ற முதலீடுகளாகும்.

rajendran-mida-deputy ceo-“எனவே, மைடா மூலமாக அரசாங்கம் உள்ளூர் நிறுவனங்களுக்கு வழங்கி வரும் ஊக்குவிப்புகளை இந்திய வணிகர்களும் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். உதாரணமாக, நிறுவனச் செயல்பாடுகளின் மதிப்பை அதிகரிக்கச் செய்யும் – உயரிய தொழில்நுட்ப மேம்பாடுகளைக் கொண்டுவரும் – புத்தாக்கத் திறன் கொண்ட – அறிவாற்றலை பெருக்கும் வல்லமை கொண்ட – தொழில் நிறுவனங்களுக்கென, அவை தங்களின் ஆற்றலை வளர்த்துக் கொள்ள சிறப்பு நிதி ஒன்றை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. உள்நாட்டு முதலீட்டு வியூக நிதி (Domestic Investment Strategic Fund -DISF) என்ற பெயரில் இயங்கும் இந்த நிதியின் மூலம் 2017 டிசம்பர் வரை 13 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்திருக்கும் 270 நிறுவனத் திட்டங்களுக்கு 1.3 பில்லியன் ரிங்கிட் உதவி நிதி (grants) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது” என இராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்திய தொழில் நிறுவனங்கள், போட்டித் தன்மையை நிலை நிறுத்தவும், அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்லவும், தங்களின் தொழில்களை நவீனப்படுத்தவும், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பங்கெடுப்பைக் குறைக்கும் வண்ணம், தானியங்கி இயந்திர முறைகளையும், உற்பத்தி ஆற்றலை அதிகரிக்கும் வழிவகைகளையும் ஆராய வேண்டும். இதற்காக, நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் சிறப்பு நிதி ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது (Accelerated Capital Allowance – ACA).

“இந்திய நிறுவனங்கள் இத்தகைய நவீனத்துவத்திற்கு மாறவேண்டும். அதற்கான நிதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான நிதியைப் பெறுவதற்காக கடந்த 2017 அக்டோபர் வரை, தானியங்கி இயந்திரங்களின் மூலம் நவீனப்படுத்துவதை ஊக்குவிப்பதற்கு 71 விண்ணப்பங்களை மைடா அங்கீகரித்தது” என்றும் இராஜேந்திரன் சுட்டிக் காட்டினார்.

சிறிய, நடுத்தரத் தொழில்களுக்கான முதலீட்டு ஆலோசனை மையத்தை மைடா, கோலாலம்பூர் நியூ சென்ட்ரல் வளாகத்தில் உள்ள தனது தலைமையகத்திலும், நாடு முழுமையிலும் உள்ள மாநில அளவிலான அலுவலகங்களிலும் ஏற்படுத்தியுள்ளது.

மைடாவின் இந்த ஒற்றைச் சாளர முறையை (single contact point) மலேசிய நிறுவனங்கள், குறிப்பாக இந்தியர்களின் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு, தகுந்த ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் பெறலாம். அதன் மூலம் தங்களின் வணிகங்களை நாடு தழுவிய அளவிலும், அண்டை நாடுகளுக்கிடையிலும், அனைத்துலக அளவிலும் நிறுவனங்கள் விரிவாக்கிக் கொள்ள முடியும்.

மைடாவின் திட்டங்கள், அறிக்கைகள், தொடர்ந்து அதன் அகப்பக்கத்திலும், தொடர்புடைய கீழ்க்காணும் இணையத் தளங்களிலும் இடம் பெற்று வரும். ஆர்வமுடையவர்கள் அதன் மூலம் தொடர்பு கொள்ளலாம்:

www.mida.gov.my

முகநூல் (பேஸ்புக்) – @OfficialMIDA

டுவிட்டர் – OfficialMIDA

மேலும் தகவல்களைப் பெற கீழ்க்காணும் மைடா அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்:

Mr. Ahmad Tajudin Omar

Director, Domestic Investment Division, MIDA

Tel.: 03-2267 3627 | Email: tajudin@mida.gov.my

 

Mr. Sashirao Appanah

Assistant Director, Domestic Investment Division, MIDA

Tel.: 03-2267 3664 | Email:  sashirao@mida.gov.my