Home One Line P2 2019-இல் 15 பில்லியன் ரிங்கிட் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்த பினாங்கு மாநிலம்

2019-இல் 15 பில்லியன் ரிங்கிட் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்த பினாங்கு மாநிலம்

498
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – அந்நிய நேரடி முதலீடுகளை அதிகமாக ஈர்க்கும் மாநிலங்களில் எப்போதும் முதல் நிலை வகித்து வந்துள்ள பினாங்கு, தொடர்ந்து அந்த சாதனையைத் தற்காத்து வருகிறது.

2019-ஆம் ஆண்டில் மட்டும் 166 திட்டங்களின் வாயிலாக 15 பில்லியன் ரிங்கிட் அந்நிய நேரடி முதலீட்டை தொழில் உற்பத்தித் துறையில் அம்மாநிலம் ஈர்த்துள்ளது என மாநில முதல்வர் சௌ கோன் இயோ (படம்) அறிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை மொத்தமாகக் கணக்கெடுத்தால் 16.9 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டங்களை தனது நிருவாகம் அங்கீகரித்துள்ளதாகவும் சௌ கோன் இயோ மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மாநிலத்தின் வரலாற்றில் இந்த இரண்டு புள்ளிவிவரங்களும் அதிகபட்சமான சாதனை எனவும் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) ஜோர்ஜ் டவுனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் வர்ணித்தார்.

பினாங்கு மாநிலத்திற்கென சொந்த வளங்கள் இல்லை என்றாலும் இம்மாநிலத்தின் தொழில்துறை சூழலும் ஏராளமாக நிறைந்திருக்கும் கைத்திறன் மற்றும் ஆற்றல் கொண்ட மக்களும் தொடர்ந்து முதலீட்டாளர்களை ஈர்க்கும் அம்சங்களாக இருந்து வருகின்றன.

கொவிட்-19 பாதிப்புகளால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பினும் பினாங்கு மாநிலத்தின் பொருளாதாரம் தொடர்ந்து வலிமையுடன் இருந்து வருவதைத் தான் உறுதி செய்யப் போவதாகவும் சௌ தெரிவித்தார்.

சேவைத் துறையிலும் முன்னணி வகிக்கும் பினாங்கு மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் கடந்த ஆண்டு 49 விழுக்காடு பங்களிப்பை சேவைத் துறை வழங்கியது. 46 விழுக்காடு பங்களிப்பை தொழில் உற்பத்தித் துறை வழங்கியது.

சேவைத்துறையில் சுமார் 300,000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் இவர்களில் பாதி விழுக்காட்டினர் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டிருக்கின்றனர் என்றும் பினாங்கு முதல்வர் கூறியிருக்கிறார்.

மலேசியாவின் அந்நிய நேரடி முதலீடு

இதற்கிடையில் கடந்த திங்கட்கிழமையன்று மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையின்படி மொத்தம் 207.9 பில்லியன் மதிப்புடைய முதலீடுகளை தொழில் உற்பத்திகள், சேவைத் துறைகள், மூலத் தொழில்கள் ஆகிய துறைகளில் கடந்த ஆண்டில் மலேசியா ஈர்த்திருக்கிறது. 2018 ஆண்டைவிட இது 1.7 விழுக்காடு கூடுதலாகும்.

இந்த முதலீட்டில் 60.4 விழுக்காடு – சுமார் 125.5 பில்லியன் ரிங்கிட் – உள்நாட்டிலேயே பெறப்பட்ட முதலீடுகளாகும்.

அந்நிய நேரடி முதலீடு, மொத்த முதலீட்டில் 39.6 விழுக்காடாக இருந்தது. இதன் மதிப்பு 82.4 பில்லியன் ரிங்கிட்டாகும். 2018-ஆம் ஆண்டை விட இது 2.9 விழுக்காடு வளர்ச்சியாகும்.