ஜெனீவா, மார்ச் 12 – ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது, வரும் 21ம் தேதி வாக்கெடுப்பு நடக்க உள்ளது. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இறுதிகட்ட போர் நடந்தது இதில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை சித்ரவதை செய்து ராணுவத்தினர் கொன்று குவித்தனர்.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் சேனல்4 என்ற டிவி, இறுதிகட்ட போரில் இலங்கை ராணுவத்தினரின் அத்துமீறல்கள் பற்றிய ஆவண படம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அதில், பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை ராணுவத்தினர் சுட்டுக் கொன்ற கொடூர காட்சிகள் இருந்தன. அதை பார்த்த உலக தலைவர்கள் பலர் கடும் அதிர்ச்சி அடைந்து இலங்கைக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை பாதுகாப்புக் கவுன்சிலின் 22வது கூட்டம், கடந்த வாரம் தொடங்கியது. நேற்றுமுன்தினம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தது. இந்த தீர்மானத்தின் மீது வரும் 21ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அப்போது, இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமைகளை கண்டித்து பல நாடுகளும் கண்டன குரல் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவின் நிலை இதுவரை தெளிவாக அறிவிக்கப்படவில்லை. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்குமா, விலகி இருக்குமா என்ற கேள்வி பல நாட்டு தலைவர்களிடம் நிலவுகிறது.