புது டெல்லி – இந்தியா அல்லாமல் ஐநாவில் உரையாற்றுவதாக இருந்தாலும் சரி, கூகுளில் உரையாற்றுவதாக இருந்தாலும் சரி, மோடி ஏன் ஆங்கிலத்தை தவிர்த்து இந்தியில் பேசுகிறார் என்ற மனக்குறை வெளிநாட்டவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ இந்தியர்களுக்கு உண்டு. சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் வாயிலாக இதனைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், மோடி எங்கு சென்றாலும் இந்தியை பயன்படுத்துவதற்கான காரணங்கள் உள் அர்த்தம் கொண்டதாக பொது நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. அரசியல் சார்ந்த அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று இருக்கும் மோடி நினைத்தால், ஆங்கிலத்தில் பேசமுடியும். ஆனால் உலக அளவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றாக இருக்கும் இந்திக்கு உரிய அங்கீகாரம் ஐநாவில் இதுவரை கொடுக்கப்படவில்லை. அதனை எப்படியும் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் மோடி, எங்கு சென்றாலும் இந்தியில் உரையாற்றுகிறார் என்று கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், மோடி உரையாற்றும் போது எப்போதும் ஏற்கனவே தயார் செய்து வைத்திருப்பதை படிப்பதில்லையாம். அந்த நிமிடங்களில் கூடி இருக்கும் மக்களின் மனநிலை என்னவாக இருக்கும், அங்கு எதை பேசினால் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து வைத்து கொண்டு பேசுவாராம். அதற்கு இரண்டாம் மொழியான ஆங்கிலத்தை பயன்படுத்த முடியாது என்றும் கூறுகின்றனர்.
எது எப்படியோ, சீனாவில் தங்களை வளர்த்துக் கொள்வதற்காகவும், தனது சீன உறவினர்களுக்காகவும் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் மாண்டரின் மொழியை கற்றுக் கொண்டது போல், அடுத்த சில வருடங்களில் இந்தியாவுடன் சுதந்திரமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு உலகத் தலைவர்கள் இந்தி கற்றுக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
-சுரேஷ்