கோலாலம்பூர் – ஷெல் மலேசியா அடுத்த இரண்டு வருடங்களுக்குள் 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்யத் தயாராகி வருவதாக அறிவித்துள்ளது. வர்த்தகத்தில் இருக்கும் போட்டியை சமாளிக்கவும், திறனை மேம்படுத்தவும் இத்தகைய பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஷெல் குழுமத்தின் தலைவர் இயன் லூ கூறுகையில், “பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை சமரசம் செய்யாமல், எங்கள் நிறுவனத்தை வலுப்படுத்தும் விதமாக உற்பத்தி மற்றும் செயல்திறனிற்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறோம். அது தொடர்பாக, சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஷெல் குழுமத்தில் 6,500 ஊழியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.