Home Featured கலையுலகம் “ஜகாட் தமிழ் சினிமாக்களுக்கு இடையிலான வெற்றிடத்தை நிரப்பும்” – இயக்குநர் சஞ்சய்

“ஜகாட் தமிழ் சினிமாக்களுக்கு இடையிலான வெற்றிடத்தை நிரப்பும்” – இயக்குநர் சஞ்சய்

732
0
SHARE
Ad

Jagat

கோலாலம்பூர் – ‘ஜகாட்’ திரைப்படம் பற்றிய கேள்விகளுக்கு ஆய்வுப் பூர்வமாகப் பேசுகிறார் இயக்குநர் சஞ்சய் பெருமாள்.

“சில வருடங்களுக்கு முன்ன டெஸ்க்டாப் இருந்துச்சு. போன் இருந்துச்சு. அது ரெண்டுக்கும் இடையில இருந்த வெற்றிடத்தை நிரப்ப வந்தது தான் ஸ்மார்ட் போன். அது மாதிரி தான்.. இத்தனை வருஷமா வந்துக்கிட்டு இருக்குற தமிழக சினிமாக்கள் டெஸ்க்டாப் மாதிரி. மலேசியா, ஆஸ்திரேலியான்னு உலக அளவுல தமிழ்ப் படம் தயாரிக்குற எல்லாரும் அந்த டெஸ்க்டாப் மாதிரியே இன்னொன்ன கொண்டு வர தான் முயற்சி செஞ்சிக்கிட்டு இருக்காங்க. ஆனா ‘ஜகாட்’ அது ரெண்டுக்கும் இடையில இருக்குற வெற்றிடத்தை நிரப்பும் ஒரு படம்” என்கிறார்.

#TamilSchoolmychoice

‘ஜகாட்’ படத்தின் முதல் முன்னோட்டக் காட்சி நேற்று இரவு வெளியானது. கிளாசிக்காக இருக்கும் அந்த 30 நொடிக் காட்சியின் தொடக்கத்திலேயே வாயில் சிகரெட்டை ஸ்டைலாகப் பற்ற வைக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். தொலைக்காட்சியில் ரஜினி செய்வதைப் பார்த்து அப்படியே தனது பென்சிலை வாயில் சிகரெட்டாக எண்ணிப் பற்ற வைக்கிறான் ஒரு சிறுவன். அவன் பார்வையில் ஓராயிரம் அர்த்தங்கள். அதோடு அந்தக் காட்சி முடிகின்றது.

Jagat 1

தோட்டப்புறங்களில் வாழ்ந்த மலேசிய இந்தியர்களின் வாழ்வைப் பற்றி பல நாவல்களும், ஆவணப்படங்களும் வந்திருக்கின்றன. ஆனால் ஜகாட் அவற்றையும் தாண்டி இதுவரை சொல்லப்படாத ஒரு களம் என்றும் சஞ்சய் கூறுகின்றார்.

மலேசிய இந்தியர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு அத்தியாயத்தைக் கையிலெடுத்திருக்கிறீர்களே? அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்றேன்.

“புறக்கணிக்கப்பட்ட என்றால், முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு கருத்து அல்ல. தோட்டப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி மலேசிய இந்தியர்கள் இடம்பெயரும் சூழலுக்குத் தள்ளப்பட்ட காலக்கட்டத்தில் நடந்த சம்பவங்கள் தான் கதை” என்றார் சஞ்சய்.

மேலும், ஒரு இனம் மற்ற இனங்களைப் பற்றியும், அவர்களது நம்பிக்கைகளைப் பற்றியும் சரியான புரிதல் இல்லாததால் தான் பிரச்சனைகள் உருவாகின்றன என்று குறிப்பிடும் சஞ்சய், இப்படத்தைப் பார்க்கும் மலேசியாவில் உள்ள மற்ற இனங்களைச் சேர்ந்தவர்களால், இந்தியர்களின் வாழ்க்கைச் சூழலைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள முடியும் என்கிறார்.

‘ஜகாட்’ முன்னோட்டம்:

https://www.facebook.com/jagatthemovie/videos/1146559228706720/

– ஃபீனிக்ஸ்தாசன்