புத்ராஜெயா– கடந்த சில மாதங்களாக, மலேசிய ஆட்சியாளர்களில் துணிந்து அரசாங்கத்திற்கு எதிராகவும், குறிப்பாக பிரதமர் நஜிப்புக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ஜோகூர் சுல்தான்.
அவரைத் தொடர்ந்து தற்போது பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவும் (படம்) துணிந்து சில கருத்துகளைக் கூறியிருக்கின்றார்.
“பொதுமக்களால் பதவிகளில் அமர்த்தப்பட்டவர்களும், அரசாங்கத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளும், நம்பிக்கைக்குரிய அறங்காவலர்களாக நடந்து கொள்ளவேண்டும் என்றும், நேர்மையான முறையில் தங்களின் கடமைகளை ஆற்றிவரவேண்டும் என்றும், கடவுளுக்கு அஞ்சி தங்களின் பொதுப்பணிகளை மேற்கொண்டு வர வேண்டும் என்றும் பேராக் சுல்தான் தெரிவித்துள்ளார்.
உலக இஸ்லாமிய நாடுகள் மற்றும் பல்கலைக் கழகத் தலைவர்களின் உச்சநிலை மாநாட்டில் இன்று உரையாற்றியபோது, பேராக் சுல்தான் இவ்வாறு கூறியுள்ளார். அதோடு நாட்டின் முக்கிய அதிகார மையங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பேராக் சுல்தான் நஸ்ருதின் ஷா மேலும் கூறியுள்ளார்.
அரசாங்க மையங்களின் மீதான நம்பிக்கை ஒருமுறை நிலைகுலைந்து விட்டால் அதன்பின்னர் அத்தகைய நம்பிக்கையை மீண்டும் ஈட்டுவது என்பது மிகவும் சிரமமானதாகி விடும் என்றும் நஸ்ருதின் ஷா தனது உரையில் எச்சரித்துள்ளார்.