பினாங்கு – வெறிநாய் விவகாரம் இத்தனை விஸ்வரூபம் எடுக்கும் என்று பினாங்கு முதல் லிம் குவான் எங் நினைத்திருக்கமாட்டார்.
கடந்த மூன்று வாரங்களாக தொடர்ச்சியாக இது குறித்த பேட்டிகள் மற்றும் பதிவுகளை வெளியிட்டு மக்களை சாந்தப்படுத்த முயற்சித்து வருகின்றார்.
வெறிநாய் கடித்து பலர் ரேபிஸ் நோய்க்கு உள்ளாவதைத் தடுக்க பினாங்கில் தெருநாய்களை கொல்வதற்கு நடவடிக்கை எடுக்க பினாங்கு அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கொடூரமான முறையில் தெருநாய்களைக் கொல்லபடுவது போன்ற புகைப்படங்கள் நட்பு ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அதைக் கண்டு கொதித்தெழுந்த விலங்கு ஆர்வலர்கள் நாய்களைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 27-ம் தேதி, லிம் குவான் எங் தனது பேஸ்புக் பக்கத்தில் வெறிநாய் கடிக்கு உள்ளான ஒருவரின் காயத்தைப் படமாக வெளியிட்டிருந்தார். மிகவும் ஆழமான அந்தக் காயத்தில் நாயின் பற்கள் சதையையும் தாண்டி எலும்பு வரைப் பாய்ந்திருப்பதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், அந்தப் படத்தால், இந்த விவகாரத்தில் இன்னும் கூடுதலாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
“அது நிச்சயமாக நாய் கடித்ததற்கான காயமாக இருக்காது. சரியாக விசாரணை செய்யாமல் குவான் எங் அந்தப் படத்தைப் பதிவு செய்து மக்களை அச்சமூட்டி வருகின்றார்” என்று பலர் குற்றம்சாட்டி வருவதாக ‘த ஸ்டார்’ இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.
அதற்கு இன்று தனது டுவிட்டரில் பதிலளித்துள்ள லிம், “த ஸ்டாரின் பொய்கள் விரைவில் நிரூபிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.