Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: மறவன் – நெஞ்சைத் தொடும் மலேசிய திரைப்ப(பா)டம்!

திரைவிமர்சனம்: மறவன் – நெஞ்சைத் தொடும் மலேசிய திரைப்ப(பா)டம்!

1535
0
SHARE
Ad

Maravanகோலாலம்பூர் – பணம் காசு சம்பாதிக்க வேண்டும். விரைவில் வீடு கார் வாங்க வேண்டும். பிள்ளைகளை பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று கனவு காணும் ஒரு தோட்டத் தொழிலாளிக்கு இரண்டு விதமான வாய்ப்புகள் வருகின்றன.

ஒன்று நிலத்தில் உழைப்பைப் போட்டு பின்னர் சில ஆண்டுகள் காத்திருந்து லாபம் ஈட்டுவது. இன்னொன்று திரைமறைவுத் தொழில் செய்யும் வாய்ப்பு. இவற்றில் அதன் ஆழம் தெரியாமல் திரைமறைவு தொழிலைத் தேர்ந்தெடுக்கும் அந்தத் தொழிலாளிக்கு கடைசியில் என்ன கதி நேர்கிறது என்பதை மிக அழகாக தனது விறுவிறுப்பான திரைக்கதையின் வழி சொல்லியிருக்கிறார் இயக்குநர் எஸ்டி புவனேந்திரன்.

தமிழகப் படங்களில் இது போன்ற கதையம்சங்களுடன் கூடிய படங்கள் நிறைய வந்திருந்தாலும் கூட, மலேசியத் தமிழர்களின் வாழ்க்கைச் சூழலுக்குத் தகுந்தவாறு அதில் பல மாற்றங்களைக் கொண்டு வந்து, மண்வாசனையோடு மறவன் வந்திருப்பதால் உண்மையில் நமக்கு புதுமையான படம் தான்.

#TamilSchoolmychoice

நடிப்பு

அஸ்ட்ரோ புகழ் அறிவிப்பாளர் குமரேசன்.. படத்தில் தோட்டத்தொழிலாளியாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். “அத்தனை உழைப்பையும் மண்ணுல போட்டுட்டு என்னால வானத்தைப் பாத்துக்கிட்டு இருக்க முடியாது” என்று அப்பாவியாகப் பேசுவதாகட்டும், “சார்.. விட்டுருங்க சார்.. என்னால இதெல்லாம் பார்க்க முடியாது சார்” என்று ஹரிதாசின் காலில் விழுந்து கதறுவதாகட்டும் அற்புதமான நடிப்பு.

காரைப் பரிசாகப் பெற்றுவிட்டு, வசனமே இல்லாமல் ஒரு சில நொடிகள், குமரேசன் காட்டும் முகபாவனைகள் போதும் நம்மை கதையுடன் ஒன்ற வைக்க. அந்த ஒரு சில நொடிகள் நடிப்பு அவருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மலேசியத் திரையுலகிற்கும், “நாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்” என்பதற்கான சான்று.

Maravan 5

அடுத்ததாக, அன்பா கதாப்பாத்திரம்.. நடிகர் ஹரிதாசின் சினிமா வாழ்க்கையில் இன்னொரு பரிணாமம். கண்களில் வன்மமும், உதட்டில் கள்ளச் சிரிப்பும், பேச்சில் கனிவும் அடடா.. ஒரு தகுதியான வில்லன் நடிகர் தயாராகிவிட்டார் என்று அடித்துச் சொல்லலாம்.

“டானைப் பார்க்கணுமா… ஹாஹ்ஹா… பார்க்கலாம்.. பார்க்கலாம்” என்று ஹரிதாஸ் வசனம் பேசும் காட்சியில் என்ன நடக்குமோ என்று  நமக்கு நெஞ்சம் பதறுவதை தடுக்க முடியவில்லை. அந்த அளவிற்கு அந்தக் காட்சியை வீரியமாக்குகிறது ஹரிதாசின் நடிப்பு. “பறக்கணும்னா சூடு தாங்கணும்டா” போன்ற வசனங்கள் நச்சென மனதில் நிற்கின்றன.

அடுத்ததாக, போலீஸ் அதிகாரியாக வரும் சீலன். அவரது கதாப்பாத்திரத்திற்கு வசனங்கள் குறைவு என்றாலும், தனது கம்பீரத்தாலும், நடிப்பாலும் நம்மைக் கவர்ந்திழுக்கிறார். அவரும், புஷ்பா நாராயணும் கதைக்குள் வந்த பிறகு படம் ஜெட் வேகம் எடுக்கிறது. பெண் போலீஸ் அதிகாரியாக புஷ்பா ஏகப் பொருத்தம். சீலன், புஷ்பா இருவருமே பிரமிக்க வைக்கும் பிட்னசோடு இருப்பது இன்னொரு பலம்.

Maravan 4

நமது மலேசியப் போலீஸ் படையில் உள்ள இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது அவர்கள் இருவரின் நடிப்பும், மிடுக்கான தோற்றமும்.

படத்தில் டானாக வரும் நடிகர் ஜகனின் கதாப்பாத்திரத்தின் நடிப்பும் வசனங்களும் சிறப்பு. அவரது கதாப்பாத்திரத்திற்கு பின்னணிக் குரலாக ஆண்டனி ராஜின் குரல் கணீர் என்று ஒலிக்கிறது. நடிகர் ஜகன் அந்தக் கதாப்பாத்திரத்திற்கு சரியாகப் பொருந்துகிறார் என்றாலும், கதைக்கு அவரது கதாப்பாத்திரம் தேவையில்லாத ஒன்றாகவே தெரிகிறது. காரணம், அன்பாவிற்கே அவர் தான் டான் என்று சொல்கிறது கதை.

ஒரு கட்டத்தில் அவரே நேரடியாக குமரேசனின் வீட்டிற்கு சென்று மிரட்டுகிறார். சரி அவர் தான் கடைசி வரை கதையை நகர்த்திச் செல்லப் போகிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், கிளைமாக்சில் அவருக்கு என்ன ஆனது? எங்கே சென்றார்? என்பது கேள்விக்குறியாகவே வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அன்பாவோடு உடன் வரும் நடிகர் வசனமே இல்லாமல் முகபாவனைகளாலேயே படம் முழுவதும் மிரட்டியிருக்கிறார்.

அதேபோல், ஒரு குடும்பத் தலைவியாக, குழந்தைகளின் தாயாக கவிதா தியாகராஜனின் நடிப்பு அற்புதம். “என்னங்க காச மண்ணுல போடுறது தாய் மடியில போடுறதுக்கு சமம்” என்று கணவனுக்கு அறிவுரை கூறுவதாகட்டும், கணவர் தீய வழிக்குச் செல்கிறார் என்பதை அறிந்து தவிப்பதாகட்டும் நெஞ்சைத் தொடுகிறார்.

படத்தில் மலேசிய மக்களின் செல்லக் குட்டிகளான நடிகர் டேனிஸ்குமார், நடிகை சங்கீதா கிருஷ்ணசாமியின் கூட்டணி மீண்டும் ஒருமுறை தங்களது திறமைகளை நிரூபித்திருக்கிறார்கள். கதையில் அழுத்தமான கதாப்பாத்திரம் இல்லை என்றாலும், ஒவ்வொரு இறுக்கமான காட்சிகளுக்குப் பிறகும் ரசிகர்கள் தங்களை சற்று இளைப்பாற்றிக் கொள்ள டேனிஸ், சங்கீதா காதல் காட்சிகள் உதவுகின்றன. ‘ஆசம்’ கவிதை நிச்சயம் உங்களை மகிழ்ச்சி படுத்தும்.

Maravan 1

அவர்களோடு, நகைச்சுவைக் கூட்டணியில் நடிகர் லோகநாதன், ஷான் மனோ,  எஸ்.ஏ.ராஜா, ஏஎம்ஆர் பெருமாள், முருகேஷ், எஸ்.பரஞ்சோதி ஆகியோரும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இவர்கள் தவிர படத்தில் நடித்துள்ள அத்தனை குழந்தை நட்சத்திரங்களையும் பாராட்ட வேண்டும். காரணம் அவர்களது நடிப்பில் செயற்கைத் தனங்களைப் பார்க்க இயலவில்லை. குழந்தைகள் அழுவது போன்ற ஒரு காட்சி அவ்வளவு தத்ரூபமாக வந்துள்ளது.

ஒளிப்பதிவு மற்றும் இசை

ராஜ வத்சலத்தின் ஒளிப்பதிவு கதைக்கு பக்கபலமாக உள்ளது. மலேசிய கிராமப்புறங்களை மிக நேர்த்தியாகப் படம் பிடித்துள்ளார். அதிலும் குறிப்பாக ‘ஹெலி ஷாட்’ காட்சிகள் மிகவும் அழகு. ஆனால் படமாக்கப்பட்டுள்ள இரவுக் காட்சிகளில் ஆங்காங்கே ஏற்படும் தெளிவின்மை (Grains) தவிர்த்திருக்கலாம். அதனால் கதைக்கோ, ரசிப்புத் தன்மைக்கோ எந்த ஒரு பாதிப்பும் இல்லை.

ஜோஸ் பிராங்களின் மற்றும் சைக்கோ மந்திராவின் இசையில் மூன்று பாடல்களும் மிகவும் அருமை. ரொக்கப் பணம் சாமி தனியாகக் கேட்பதை விட கதையோடு சேர்ந்து கேட்கும் போது மிகவும் ரசிக்க வைத்தது.

அதே போல், ‘ஒரு வெண் பொன்மாலை’ பாடலும் காட்சிகளும் அருமை.. “ஆளில்லா சாலை… மயிலாடும் அழகிய சோலை” அட அட என்ன ஒரு ரசனை.. பாடல் வரிகள் எழுதிய தமிழன், புவனேந்திரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். படம் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வரை இசையும், பாடல் வரிகளும், காட்சிகளும் மனதைவிட்டு அகலவில்லை.

கார் கழுவுமிடத்தில் நடந்த தவறு என்று கூறி, அண்மையில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தை, நகைச்சுவைக் காட்சியாக மாற்றிய இயக்குநர், அந்தக் காட்சியில் ‘பங்களா’ என்ற சொல்லைத் தவிர்த்திருக்கலாம். உண்மையில் அப்படி ஒன்று நடந்ததா? என்று உறுதியாகத் தெரியாது. அப்படியே ஒன்று நடந்திருந்தாலும், ஒரு பங்களா நாட்டைச் சேர்ந்தவர் செய்த தவறுக்காக மற்றவர்களும் அப்படித் தான் என்ற எண்ணமும், தவறான கண்ணோட்டமும் மக்களுக்கு வந்துவிடக்கூடாது. மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் பலரும் அந்தப் புகைப்படத்தை பகிர்ந்து அதை பேஸ்புக்கில் டிரண்ட் ஆக்கியிருக்கலாம். ஆனால் திரைப்படத்தில் சொல்லும் போது அந்தக் கூற்று இன்னும் பலமடைகிறது. இதனால் நமது நாட்டிற்கு வரும் அவர்களின் பிழைப்பு பாதித்து விடக்கூடாது.

மற்றபடி, படம் உண்மையில் மிகவும் அருமை.. நன்மை எது? தீமை எது? என்பதை ஒரு கருத்தாக மட்டுமே பதிவு செய்யாமல், அதில், “படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர் போலீசின் துப்பாக்கிச் சூட்டில் சிக்குவது”, “பள்ளிக் குழந்தைகள் கடத்தல்” உள்ளிட்ட பல உண்மைகளையும் சொல்லியிருக்கும் ‘மறவன்’ நெஞ்சைத் தொடும் மலேசியப் படம் மட்டுமல்ல பாடமும் தான்..

திரையரங்கில் கொடுக்கும் காசிற்கு எந்த ஒரு ஏமாற்றமும் இன்றி ரசித்துவிட்டு வரலாம். இப்படி ஒரு அற்புதமான படம் உருவாகக் காரணமான தயாரிப்பாளர் சந்துரு ‘கீஸ்’ இன்னும் இது போல பல தரமான படங்களை உருவாக்கி, எஸ்.டி.புவனேந்திரன் போன்ற திறமையான மலேசிய இயக்குநர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

-ஃபீனிக்ஸ்தாசன்