மும்பையை சேர்ந்தவர் இலியாஸ் என்பவர் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கும் தனது மனைவி நூர்ஜகானை டாக்சி ஒன்றின் மூலம் மருத்துவமனை அழைத்துச் சென்றிருக்கிறார். குறுகலான சந்துக்கள் நிறைந்த அப்பகுதியில் டாக்சி ஓட்டுனரால் வேகமாக செல்ல முடியவில்லை.
ஆனால், அதற்குள் நூர்ஜகானுக்கு பிரசவ வலி அதிகமாகிவிட்டது. அவரது அலறலைக் கேட்ட அருகே இருக்கும் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் பெண்கள், நூர்ஜகானை கோயிலுக்குள் அழைத்துச் சென்று பிரசவம் பார்த்தனர். அடுத்த சில நிமிடங்களில் நூர்ஜகானுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்பு, இருவரையும் அப்பகுதி வாசிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க உதவினர்.
இந்த சம்பவம் குறித்து நூர்ஜகான் கூறுகையில், “நான், சாலையின் நடுவே குழந்தையை பெற்றெடுத்து விடுவேனோ என்று பயந்தேன். ஆனால் அருகில் இருந்து விநாயகர் கோயிலை கண்டவுடன், கடவுளே என்னுடன் இருப்பதாக உணர்ந்தேன்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மேலும், தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு ‘கணேஷ்’ என்று பெயர் சூட்டி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மதவாதிகளின் சுயநல அரசியல் பெருகி வரும் நிலையில், இது போன்ற சம்பவங்கள் தான் இந்தியாவில் மனிதம் சமநிலையில் இருக்க உதவுகிறது.