சென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் அதிமுகவில் உள்ள நடிகர், நடிகைகள் போட்டியிடக் கூடாது என அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நடிகர் சரத்குமார் தரப்பினருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் சங்கத் தேர்தல் களத்தில் தற்போது அனல் பறக்கிறது.
இந்நிலையில் ஆளும் அதிமுகவின் ஆதரவு, நடப்புத் தலைவர் சரத்குமாருக்கு பரிபூரணமாக உள்ளது என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதிமுக தலைமையின் இந்த அதிரடி முடிவு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
விஷால், கார்த்தி உள்ளிட்ட இளம் நடிகர்கள் தற்போது ஒரு குழுவாக செயல்பட்டு வருகின்றனர். மறுபக்கம் விஜயகுமார், ராதாரவி உள்ளிட்ட மூத்த கலைஞர்கள் சரத்குமாருக்கு பக்கபலமாக உள்ளனர். விஷால் அணிக்கு நடிகர் கமல்ஹாசன் வெளிப்படையாக ஆதரவு அளித்துள்ளார். நடிகர் ரஜினியின் நிலைப்பாடு குறித்து இதுவரை தகவல் இல்லை.
இத்தகைய சூழ்நிலையில் அதிமுக தலைமை சரத்குமாருக்கு ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்கட்சித் தலைமை எடுத்துள்ள அதிரடி முடிவோ, சரத்குமாரை குழப்பத்திலும், அவரது எதிர்த்தரப்பை உற்சாகத்திலும் மூழ்கடித்துள்ளது.
சரத்குமார் அணியை ஆதரித்தால் தேவையின்றி இளம் முன்னணி நடிகர்களின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்று அதிமுக தலைமை கருதியதாகக் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவது உறுதியான நிலையில், நடிகர் சங்கத் தேர்தலில் எடுக்கும் நிலைப்பாடு காரணமாக, இளம் நடிகர்களின் கோபத்தை சம்பாதிக்க அதிமுக தலைமை விரும்பவில்லை எனத் தெரிகிறது.
மேலும் நடிகர் சங்கத் தேர்தல் தமிழகத்தின் தலைவிதியையோ அல்லது அரசியல் களத்தில் பாதிப்பையோ ஏற்படுத்தக்கூடிய நிகழ்வல்ல. எனவே இதில் நடுநிலை வகிப்பதே சிறந்த முடிவாக இருக்கும் என அதிமுக தலைமை கருதி இருக்கலாம் என அரசியல் கள ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.