கோலாலம்பூர், மார்ச் 12 – அரசாங்கப் பணியாளர்களின் ஊதிய உயர்வு குறித்து பிரதமர் நஜிப் நேற்று அறிவித்ததை எதிர்த்து பி.கே.ஆர் கட்சியின் வியூக இயக்குனர் ராபிஷி ரமலி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அரசாங்கப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் அதிகாரம் தற்போது நஜிப் அரசுக்கு இல்லை என்றும், நஜிப் தலைமையிலான அரசின் ஆட்சிக்காலம் கடந்த மார்ச் 8 ஆம் தேதியுடன் நிறைவடைந்து இப்போது அது ஒரு காபந்து அரசாகிவிட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், “ஐந்து ஆண்டுகள் ஆட்சிக் காலம் நிறைவடைந்தும் கூட இன்னும் தேர்தல் தேதியை அறிவிக்காத ஒரே பிரதமர் நஜிப் மட்டுமே, இதற்கு முன் பிரதமராக இருந்தவர்கள் ஆட்சி காலம் முடியும் முன்னரே தேர்தலை நடத்தியுள்ளனர். இந்நிலையில், அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதின் மூலம் அவர்கள் தேசிய முன்னணி மற்றும் அம்னோவிற்கு ஆதரவாக இருப்பார்கள் என்று வெட்கமில்லாமல் நஜிப் இது போன்ற மக்களை கவரும் அறிவிப்புக்களை வெளியிடுகிறார்.
ஆனால் அரசாங்க ஊழியர்களும், காவல்துறையினரும் இது போன்ற அறிவிப்புக்களை நம்பி ஏமாற மாட்டார்கள் காரணம் அரசாங்க உத்தரவுகளின் ஆயுட்காலம் ஐந்தாண்டுகள் மட்டுமே என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்” என்றும் ராபிஷி தெரிவித்துள்ளார்.