சென்னை- விஜய் நடித்துள்ள ‘புலி’ திரைப்படம் இதுவரை ரூ.55 கோடி வசூலித்திருப்பதாக அப்படத்தின் தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உள்நாட்டில் மட்டுமல்லாது உலகளவில் பல்வேறு நாடுகளில் இப்படத்திற்கு பலமான வரவேற்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு வெறுமனே சொல்லாமல் வசூல் குறித்த புள்ளி விவரங்களையும் அப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
‘புலி’ குறித்து பலவிதமான விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. சமூகவலைதளங்களில் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்ட போதிலும், விஜய் ரசிகர்கள் அவரைக் கைவிடவில்லை. படம் வெளியான முதல் மூன்று நாட்களும் ஒரு ரசிகர் விடாமல் அனைவரும் படம் பார்த்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்தப் படத்தில் என்னதான் இருக்கிறது? என்று ஆவலுடன் பார்க்க வந்த பொது மக்களும் திரையரங்குகளை மொய்த்து வருகிறார்களாம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் வெளியான ‘புலி’ படத்தின் மொழிவாரியான பதிப்புகள் முதல் வார முடிவில் சுமார் 20 கோடி ரூபாயை வசூலாக தந்துள்ளன.
அமெரிக்கா, கனடா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சுமார் 450க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் வார இறுதியில் 15 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
அமெரிக்காவில் மொத்தம் 89 திரைகளில் படம் திரையிடப்பட்டதாம். அதில் முதல் வாரத்தில் மட்டும் ரூ.1.25 கோடி வசூலாகியுள்ளதாம். முதலிடத்தை பாலிவுட் படமான ‘சிங் இஸ் பிளிங்’ பெற்றுள்ளது. அதன் வசூல் ரூ. 2.12 கோடி என்கிறார்கள்.
இங்கிலாந்தில் ‘புலி’க்கு ரூ. 1.42 கோடி கிடைத்துள்ளது. இங்கும் ‘சிங் இஸ் பிளிங்’தான் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதன் வசூல் ரூ. 1.91 கோடியாகும்.
மலேசியாவில் வசூல் தொகை ரூ.1.21 கோடி என்றும், 33 திரைகளில் இங்கு ‘புலி’ திரையிடப்பட்டுள்ளது என்றும், படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படம் வெளியான முதல் ஐந்து நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.35 கோடியும், இதர மாநிலங்களில் ரூ.20 கோடியும் வசூல் கண்டுள்ளது ‘புலி’ என்பதே அண்மைத் தகவல்.