புதுடெல்லி – இந்திய விமானப் படையில் பணியாற்றும் பெண் விமானிகளின் கைகளில் போர் விமானங்களைக் கொடுத்து அழகு பார்க்கவுள்ளது இந்திய அரசு.
இந்தியாவில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் அழகும், திறமையும், வீரமும் நிறைந்த இந்தியப் பெண்கள் இனி போர் விமானங்களையும் இயக்கவுள்ளனர்.
இந்திய விமானப்படையின் 83-வது ஆண்டு விழா உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹின்டன் விமானப்படைத் தளத்தில் இன்று கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் இந்திய விமானப்படைத் தலைவர் ஏர் மார்ஷல் ஆரூப் ராகா உரையாற்றுகையில், ”இந்திய விமானப்படையில் தற்போது 94 பெண் விமானிகள் பணியாற்றுகின்றனர். 14 பேர் நேவிகேட்டர்களாக உள்ளனர். மேலும் விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள், சரக்குகளை ஏற்றிச் செல்லும் விமானங்களையும் இயக்கும் பணியில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.”
“அதில் சிலர், 16,614 அடி உயரத்தில் உலகிலேயே உயர்ந்த இடத்தில் அமைந்துள்ள விமானப்படைத் தளமான லாடாக்கிற்கு ஏன்.32 ரக விமானங்களை இயக்கிய அனுபவமுள்ளவர்கள். தற்போது முதல் முறையாகப் போர் விமானங்களில் பெண்களை விமானிகளாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.
தற்போது இந்திய விமானப்படையில் 1500 பெண்கள் , நிர்வாகம், வழிகாட்டுபவர்கள் உள்ளிட்ட 7 பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.