Home Featured நாடு உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்: வேள்பாரி அறிவிப்பு!

உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்: வேள்பாரி அறிவிப்பு!

836
0
SHARE
Ad

vell-paari_mic_300கோலாலம்பூர்- மஇகா உதவித் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதாக டத்தோஸ்ரீ வேள்பாரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மஇகாவில் இருந்து வந்த குழப்பங்களும் பிரச்சினைகளும் தற்போது நீங்கி நிம்மதியும் எதிர்பார்ப்புகளும் நிலவுவதாகத் தெரிவித்துள்ளார்.

டத்தோ டாக்டர்.எஸ்.சுப்ரமணியம் தலைமையில் கட்சி பீடு நடைபோடுவதாக குறிப்பிட்டுள்ள அவர், கடந்த காலத்தில் ஏற்பட்ட சேதத்திலிருந்து கட்சியை மீட்டு சீரமைப்பதுடன் இந்திய சமூதாயத்திடம் மஇகா குறித்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பும் டாக்டர் சுப்ரமணியம் தோள்களில் உள்ளதாக கூறியுள்ளார்.

அவரது அறிக்கையில் அவர் மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

#TamilSchoolmychoice

“கட்சியை சீரமைக்கும் பணியில் உதவவும், எனது பங்களிப்பைத் தரவும், எனது குடும்பத்தாருடன் கலந்தாலோசித்தபின் மஇகா உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது என முடிவு செய்துள்ளேன்.Subramaniam-MIC

கடந்த 2009 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் போட்டியிடுவதாக முதலில் அறிவித்து விட்டு, அதன் பின்னர் பின்வாங்கியதால் இம்முறையும் நான் உண்மையாகவே போட்டியிடப் போகிறேனா எனும் கேள்வி எழுவது இயல்புதான்.
நான் ஏன் இந்த முடிவை எடுத்தேன் என்பதை விரைவில் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் விவரிப்பேன். என்னுடைய நோக்கம் மிகவும் தெளிவானது. அது கட்சியை பலப்படுத்துவது. கட்சியை ஒருங்கிணைப்பதில் நான் கவனம் செலுத்தப் போகிறேன்.

நாம் யாரை ஆதரிக்கிறோம் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏனெனில் நாம் அனைவரும் மஇகா என்ற குடும்பத்தின் உறுப்பினர்கள். நமக்கிடையேயான உறவுப்பாலத்தை மீண்டும் வலுவாக கட்டியெழுப்ப முடியும்.”

“செனட்டர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஆர்வம் இல்லை”

velpari“செனட்டர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் எனக்கு ஆர்வம் இல்லை. உதவித் தலைவர் பொறுப்பிலிருந்து சமுதாயத்துக்கும் கட்சிக்கும், அரசியலில் இருந்து ஓய்வு பெறும் வரை சேவையாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்.

உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் சில திட்டங்களை செயல்படுத்துவேன். குறிப்பாக கிளைத் தலைவர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேர தகவல் தொடர்பு மையத்தை எனது சொந்த செலவில் அமைக்க விரும்புகிறேன்.

மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதி தலைவர்கள் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய கட்சித் தலைவரின் அனுமதியோடு ஆய்வுக்குழு அமைக்கப்படும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொகுதி தலைவர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று உதவித் தலைவர் என்ற வகையில் எனது மதிப்பீட்டு அறிக்கையை முன்வைப்பேன்.

அதேபோல் எனது செயல்பாடு குறித்து அனைத்து கிளைத் தலைவர்களும் தங்களது தொகுதி தலைவர்களிடம் மதிப்பறிக்கையை அளிக்கலாம். மேலும் எனது செயல்பாடு குறித்து 6 மாதங்களுக்கு ஒருமுறை தொகுதி தலைவர்கள் மதிப்பீடு செய்யலாம். ஒருவேளை அவர்களுக்கு அதிருப்தி எனில், உதவித் தலைவர் பதவியில் இருந்து என்னை விலகக் கோரலாம். அதற்கு உடன்படுவேன்.
இதன் மூலம் தொகுதி மற்றும் கிளைத் தலைவர்களின் முக்கியத்துவம் அதிகரிக்கும்.

அடிமட்ட அளவில் கட்சிக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். கட்சியில் ‘முக்கியப் புள்ளிகள்’ என்ற நடைமுறையே இல்லாமல் போகச் செய்ய வேண்டும். நமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நாம் திட்டமிட வேண்டும். வலுவான நல்ல நிர்வாகமே இப்போது தேவை. இல்லையேல் நாம் மோசமான நடைமுறையை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்வது போல் ஆகிவிடும்.

எனவே புதிய வழிகளை நாம் கண்டறிய வேண்டும். இல்லையெல் நமது சமுதாயத்தை அரித்துக் கொண்டிருக்கும் குண்டர் கும்பல்களையும், குற்றச் செயல்களையும் நாம் தொடர்ந்து காண வேண்டியிருக்கும்.”

இவ்வாறு வேள்பாரி கூறியுள்ளார்.