கூடலூர் – கூடலூரில் நடைபெற்ற ‘நமக்கு நாமே’ பிரச்சாரப் பயணத்தின் போது, திமுக பொருளாளர் ஸ்டாலின், தன்னுடன் தம்படம் எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனரை கன்னத்தில் அறைந்தார். இந்த காணொளி தற்போது இணைய தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், அடிவாங்கியவர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தன்னை ஸ்டாலின் அடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
திலீப் என்ற அந்த ஆட்டோ ஓட்டுனர் கூறியிருப்பதாவது:-
“வாட்சாப், பேஸ்புக் போன்ற வலைதளங்களில் தளபதியை (ஸ்டாலினை) அவமானப்படுத்தும் வகையில் ஒரு வீடியோ (காணொளி) தவறாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பரப்புபவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். அந்த வீடியோ தவறானது. அந்த வீடியோவுக்கும் எனக்கும் எந்த உடன்பாடும் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரயிலில் ஸ்டாலினிடம் அடிவாங்கியவரும் இதே கருத்தினை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து ஸ்டாலின் கூறுகையில், “ஆட்டோ டிரைவரை தாக்கியதாக வெளியான காணொளி திட்டமிட்டு பரப்பப்படுகிறது. மக்களை சந்திக்க இடையூறாக இருக்க வேண்டாம் என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளேன். அதையும் மீறி மக்களை சந்திக்க இடையூறாக இருப்பவர்களை நான் கடுமையாக அதட்டுவது உண்மை தான். ஆனால் அதை அரசியலாக்க, கிராபிக்ஸ் செய்து இந்த காணொளியை பரப்பி வருகிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
எல்லாம் சரி தான். ஆனால் படங்களில் கூட இந்த அளவிற்கு துல்லியமான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுவதில்லையே. ஒருவேளை எதிர் அணியினர் ஹாலிவுட்டில் இருந்து இறக்குமதி செய்திருப்பார்களோ?