குவா மூசாங் – கடந்த ஆகஸ்ட் 23 -ம் தேதி, பள்ளியில் இருந்து மாயமான 7 ஓராங் அஸ்லி குழந்தைகளைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழுவினர். இன்று மிகவும் பலகீனமான நிலையில் இரு குழந்தைகளை காட்டில் கண்டுபிடித்து மீட்டனர்.
எனினும், அவர்களுக்கு அருகில் ஒரு குழந்தையின் சடலத்தையும் மீட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சுங்கை பெரியாஸ் ஆற்றுப் படுக்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு சிறுமியின் சடலம் காணாமல் போன 7 பேரில் ஒருவரின் சடலம் தான் என்பது உறுதியாகியுள்ளது.
அச்சிறுமியின் தலையில் பலமான காயங்கள் இருப்பதாகவும், அவர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறுவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அக்குழந்தைகள் கடந்த 48 நாட்களாகக் காட்டில் உணவின்றி பசியால் வாடியிருக்கின்றனர். இன்று மீட்கப்பட்ட அந்த இரு குழந்தைகளும், அதிகாரிகளிடம் உடனடியாக சாப்பிட சோறு வேண்டும் என்று கேட்டுள்ளது நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.
எஞ்சியுள்ள மற்ற 3 குழந்தைகள் உயிருடன் உள்ளார்களா? என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. மீட்புக் குழுவினர் தேடுதல் வேட்டையை இன்னும் தீவிரப் படுத்தினால், அவர்கள் உயிருடன் இருப்பின் இன்று இரவோ அல்லது நாளையோ மீட்கும் வாய்ப்பு உள்ளது.
படம்: நன்றி – ஸ்டார் இணையதளம்