சென்னை – பரபரப்பாகி வரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் ஒரு திருப்பு முனையாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சரத்குமார் அணிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு (படம்) இந்த அறிவிப்பைச் செய்துள்ளார். கடந்த காலங்களில் படத்தயாரிப்பு பிரச்சனைகளில் சரத்குமார் தீவிரமாக ஈடுபட்டு பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளார் என்று கூறியுள்ள தாணு, சமரசத் தீர்வுக்கு தாங்கள் அழைப்பு விடுத்தும் விஷால் தரப்பு சமாதானப் பேச்சு வார்த்தைக்கு முன்வரவில்லை என்ற காரணத்தையும் முன்வைத்து, தயாரிப்பாளர் சங்கம் சரத்குமார் தரப்புக்கு ஆதரவளிக்க முன்வந்திருப்பதாக அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் தலையிட்டு சமாதானப் பேச்சு வார்த்தைக்குக் கூப்பிட்டாலும், நாங்கள் போகமாட்டோம் என விஷால் அறிவித்திருப்பது அவர்களது ஆணவத்தைக் காட்டுவதாகவும், இன்றைக்கு தமிழ் சினிமா சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்கு காரணமாக இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விஷால் அணியினர் அவமதித்திருப்பதாகவும் கலைப்புலி தாணு கூறியுள்ளார்.
தமிழக முதல்வரையே மதிக்காதவர்களை எப்படி ஆதரிப்பது என்ற தொனியில் தாணு தினத்தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கின்றார்.
இந்த அறிவிப்பால், நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏதாவது வருமா என்பது இனிமேல் போகப் போகத்தான் தெரியும்.