சோங்கிங் – வணிக வளாகங்களில் காணப்படும் நகரும் படிக்கட்டுகளினால் (Escalator) ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகின்றன. பெரும்பாலும் குழந்தைகளும் பல சமயங்களில் பெரியவர்களின் உயிரையும் இந்த எஸ்கலேட்டர்கள் விழுங்கி விடுகின்றனர். குறிப்பாக சீனாவில் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டன.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் புகழ்பெற்ற நகரமான சோங்கிங்கில் நேற்று முன்தினம் அப்படி ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் நான்குவயது சிறுவன் பரிதாபமாக பலியானான்.
தனது இரு குழந்தைகளுடன் சோங்கிங் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர், தனது மூன்று வயது மகனை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு பயணச் சீட்டு வாங்குவதில் மும்முரமாக இருந்துள்ளார். அந்த பெண்ணின் மூத்த சிறுவனோ அருகில் இருந்த எஸ்கலேட்டரில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக நகரும் படிக்கட்டின் கைப்பிடி பகுதிக்கும் அடிப்பகுதிக்கும் இடையில் சிறுவன் சிக்கிக் கொண்டான். அடுத்த 20 நொடிகளில் பணியாளர் நகரும் படிக்கட்டின் இயக்கத்தை நிறுத்தி உள்ளார்.
எனினும், அந்த இயந்திரத்திற்குள் சிறுவனின் நெஞ்சுப் பகுதி சிக்கி, பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக அச்சிறுவன் பலியானான்.
இது தொடர்பாக ரயில் நிலைய நிர்வாகிகள் கூறுகையில், “நகரும் படிக்கட்டுகளின் இயக்கம் சரியாகத் தான் இருந்தது. சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இயந்திரத்தின் கைப்பிடி அடிப்பகுதியில் சிக்கிக் கொண்டான்” என்று தெரிவித்துள்ளார்.
அந்த சிறுவனின் தாய் கூடுதல் கவனத்துடன் இருந்திருந்தால் இந்த அசம்பாவிதத்தை தவிர்த்து இருக்கலாம் என்று உடன் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.