சென்னை – “தமிழக முதல்வர் தலையிட்டு சமாதானப் பேச்சு வார்த்தைக்குக் கூப்பிட்டாலும், நாங்கள் போகமாட்டோம் என விஷால் அறிவித்திருப்பது அவர்களது ஆணவத்தைக் காட்டுவதாக” தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு நேற்றைய பேட்டியில் குறிப்பிட்டு, அவர்களின் இந்த செயல்பாடுகளினால், தயாரிப்பாளர் சங்கம் சரத்குமார் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஒருவேளை விஷால், முதல்வருக்கு எதிராக தவறுதலாக பேசி வம்பில் மாட்டிக் கொண்டாரோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக வெளியான காணொளியை ஆராய்கையில், பத்திரிக்கையாளர்கள் ஒருவேளை முதல்வர் அழைத்தால், நீங்கள் சமாதான பேச்சுவார்த்தைக்கு உடன்படுவீர்களா? என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த விஷால், “இது ஒரு ஹைபோதெட்டிக்கள் குவெஸ்டின் (நடைமுறைக்குட்படமுடியாத கேள்வி). அத்தகைய அனுமானங்களுக்கு நாம் செல்ல வேண்டாம்” என்றே குறிப்பிட்டார்.
அப்படி இருக்கையில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, நடிகர் விஷால், முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் விதமாக பேசினார் என்று கூறி இருப்பது, விஷாலை, முதல்வருக்கு எதிரானவர் என்பது போல் சித்தரிக்க முயல்கின்றாரோ? என்ற சந்தேகம் வலுப்படுகிறது.
ஏற்கனேவே, பிரபல அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த, இளம் நடிகர் ஒருவர் விஷாலுக்கு பின்னணியில் இருக்கிறார் என சரத்குமார் அணியினர் தொடர் குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.