சென்னை – விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான புலி படம், தற்போது திரை அரங்கங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும், பத்திரிக்கைகளும், விமர்சகர்களும் கலவையான விமர்சனங்களையே ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றன. ஒருசில பத்திரிக்கைகள் படத்தை புது முயற்சி என்று பாராட்டினாலும், வட இந்திய பத்திரிக்கைகளும், ஆங்கில இதழ்களும் படத்தை கடுமையாக விமர்சித்து, மிகக் குறைவான மதிப்பெண்களை அளித்துள்ளன.
இந்நிலையில், புலி படத்தை கடுமையாக விமர்சனம் செய்வது குறித்து சினிமா ஸ்பைஸ் எண்டர்டைன்மெண்ட் இதழின் (cinema spice entertainment) தலைமை ஆசிரியர் சைலேஷ் கே நாடார் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், “ஒருவேளை ஜோசப் விஜய், இந்து பிராமணராக இருந்திருந்தால் ஆங்கிலப் பத்திரிக்கைகளும், நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு விமர்சிப்பவர்களும் புலி படத்தை பாராட்டி இருப்பார்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், புலி விவகாரத்தில் சாதியை இழுக்காதீர்கள் என்று குறிப்பிட்டும் விஜய்யின் நடிப்பை பாராட்டியும் பல்வேறு பதிவுகளை வெளியிட்டுள்ளார்.