கோலாலம்பூர் – 1எம்டிபி நிறுவனம் வெளிநாடுகளில் மேற்கொண்ட 1.83 பில்லியன் அமெரிக்க டாலர் (ஏறத்தாழ 7.58 பில்லியன் ரிங்கிட்) மதிப்பிலான மூன்று முதலீடுகளுக்கான அனுமதிகளை இரத்து செய்திருக்கும் மலேசியாவின் மத்திய வங்கியான பேங்க் நெகாரா, அந்தப் பணத்தை மீட்டு மீண்டும் மலேசியாவுக்குள் கொண்டுவர வேண்டுமென 1எம்டிபி நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருக்கின்றது.
அந்த நிறுவனத்தின் மீது விசாரணைகள் முடிந்து விட்டன இனி விசாரிப்பதற்கு ஒன்றுமில்லை என அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) அறிவிப்பு விடுத்திருக்கும் வேளையில், அதற்கு நேர் மாறானதாக பேங்க் நெகாராவின் இந்த அறிவிப்பு அமைந்திருக்கின்றது.
1எம்டிபியின் இந்த முதலீடுகள், தவறான, முழுமை பெறாத தகவல்களைத் தந்து பெறப்பட்டதால் பின்னர் இரத்து செய்யப்பட்டதாக நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பேங்க் நெகாரா தெரிவித்தது.
1953ஆம் ஆண்டின் வெளிநாட்டு பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் முழுமையான தகவல்களை விண்ணப்பதாரர்கள் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் பேங்க் நெகாரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1எம்டிபியின் இந்த மூன்று வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களின் மொத்த மதிப்பீடு 1.83 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும் பேங்க் நெகாரா குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பணத்தைத் திரும்பக் கொண்டு வர வேண்டுமென்றும், அதற்கான திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டுமென்றும் 1எம்டிபி நிறுவனத்திற்கு பேங்க் நெகாரா உத்தரவிட்டுள்ளது.
1எம்டிபி தொடர்பில் காவல் துறையும், ஊழல் தடுப்பு நிறுவனமும் மேற்கொண்டு வரும் அனைத்து விசாரணைகளுக்கும் பேங்க் நெகாரா தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அது அறிவித்துள்ளது.
இருப்பினும், ஒரு குற்றம் தொடர்பில் வழக்கு தொடுப்பது என்பது முழுக்க முழுக்க அரசாங்கத் தலைமை வழக்கறிஞரின் முடிவைப் பொறுத்தது என்றும் பேங்க் நெகாரா விளக்கம் தந்துள்ளது.