கோலாலம்பூர், மார்ச் 12 – இரத்தக்குழாய் அடைப்பு காரணமாக பி.கே.ஆரின் தேர்தல் பிரச்சாரங்களில் இனி பாலா கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய நாள் முதல் பி.கே.ஆரின் பிரச்சாரங்களில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டிருந்த பாலாவிற்கு, கடந்த மார்ச் 1 ஆம் தேதியன்று கோத்தா பாருவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் உடனடியாக சிலாங்கூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகான மருத்துவப் பரிசோதனைகளில் அவருக்கு இதயத்தில் இரண்டு இடங்களில் இரத்தக்குழாய் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் மரணத்தில் பிரதமரை சம்பந்தப்படுத்தி சத்தியப் பிரமாண வாக்குமூலத்தைப் பதிவு செய்ய தனக்கு 7 லட்சம் வெள்ளி அன்வார் வழங்கியதாக, ராஜா பெட்ரா கமாருதின் கூறியதையடுத்து, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து மறுப்பு அறிக்கை வெளியிட்ட அவர், மீண்டும் பி.கே.ஆரின் பிரச்சாரங்களில் கலந்து கொள்ள தாம் விரும்புவதாகத் தெரிவித்தார்.
ஆனால் தமக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்வதா அல்லது மருந்துகளின் மூலம் குணப்படுத்துவதா என்பதை மருத்துவர்கள் தான் தீர்மானிக்க முடியும் என்றும், ஒருவேளை அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால் நிச்சயம் தம்மால் பிரச்சாரங்களில் கலந்து கொள்ள இயலாது என்றும் கூறியுள்ளார்.
தாம் பார்த்தவரையில், பி.கே.ஆருக்கு முன்பிருந்ததை விட இப்போது மக்களின் ஆதரவு பெருகியிருப்பதாகவும், இந்தத் தேர்தலில் நிச்சயம் பி.கே.ஆர் பெரும்பான்மையான வெற்றியை அடையும் என்றும் கூறியுள்ளார்.