வாஷிங்டன்- 1எம்டிபி விவகாரம் குறித்து அமெரிக்காவில் எஃப்.பி.ஐ., தம்மிடம் எந்தவொரு விவரமும் கேட்கவில்லை என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாகிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
1எம்டிபி விவகாரம் குறித்து எஃப்.பி.ஐ., விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்கா சென்றுள்ள துணைப் பிரதமர் அங்கு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
ஆனால், அமெரிக்காவின் அரசியலை நன்கு அறிந்தவர்களோ, இதனை வேறு விதமாகப் பார்க்கின்றார்கள். காரணம், அமெரிக்காவில் விசாரணைகள் என்பது மிகவும் நுணுக்கமான, சட்டப்படியான நடைமுறைகளோடு நடைபெறும்.
வருகை தந்திருக்கும் நாட்டின் துணைப் பிரதமரிடம் சாதாரணமாக அதிகாரிகள் யாரும் தங்களின் விசாரணைகள் பற்றி கேட்கவும் மாட்டார்கள், விசாரிக்கவும் மாட்டார்கள் என விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றார்கள்.
உரிய நேரம் வரும்போது, உரிய இடத்தில்தான் புலன் விசாரணைகளின் விவரங்கள் அறிவிக்கப்படும் என்பதுதான் அமெரிக்க அரசியலின் நடைமுறையாகும்.
“அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகைமையகத்தின் (சிஐஏ) முக்கிய அதிகாரிகள், எஃப்.பி.ஐ-ன் துணை இயக்குநர், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி ஆகியோரை சந்தித்துப் பேசினேன். அவர்களில் ஒருவர் கூட 1எம்டிபி குறித்து ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை. 1எம்டிபி குறித்து எஃப்.பி.ஐ., விசாரணை நடத்துவதாகக் கூறப்படுவது மலேசியாவில் பூதாகரமாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அரசியலுக்கு பயன்படும் என்பதால் சிலர் இவ்வாறு செய்திருக்கக்கூடும்” என்றும் சாகிட் ஹமிடி தெரிவித்திருக்கின்றார்.
அமெரிக்கா சென்றடைந்த மூன்றாவது நாளான சனிக்கிழமை அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 1எம்டிபி விசாரணை தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் ஏதேனும் விவரம் தெரிவித்தனரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு விளக்கம் அளித்தார்.
“இந்த விவகாரம் தொடர்பில் ஒவ்வொருவரும், குறிப்பாக நமது சொந்தக் கட்சியை சேர்ந்த தலைவர்கள் பொது மக்களை தூண்டிவிடுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். சம்பந்தப்பட்ட விசாரணை முகைமையகங்கள் தங்களது விசாரணையை நியாயமாகவும் வெளிப்படையாகவும் சட்டத்துக்குட்பட்டும் முடித்திடும் வரையில் நாம் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று ஹமிடி மேலும் கேட்டுக் கொண்டார்.