Home Featured கலையுலகம் “மனோரமாவின் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது” – ஜெயலலிதா இரங்கல்!

“மனோரமாவின் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது” – ஜெயலலிதா இரங்கல்!

922
0
SHARE
Ad

manoramaசென்னை – நேற்று காலமான பழம்பெரும் நடிகை மனோரமாவின் மறைவு குறித்து தமிழக முதல்வரும், மனோரமாவுடன் பல படங்களில் இணைந்து நடித்தவருமான ஜெயலலிதா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

“பழம்பெரும் திரைப்பட நடிகை மனோரமா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். தமிழ்த் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் “ஆச்சி” என அன்போடு அழைக்கப்படும் மனோரமா இந்தியத் திரைப்படத் துறையில் மாபெரும் சாதனைப் படைத்தவர். மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, சினிமாவில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய தலைமுறை கதாநாயகர்கள் மற்றும் இன்றைய தலைமுறை கதாநாயகர்களுடன் 1300 திரைப்படங்களுக்கு மேல் நடித்து சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகை ஆட்சி செய்தவர் மனோரமா” என மனோரமாவுக்கு ஜெயலலிதா புகழாரம் சூட்டினார்.

jayalalitha1“தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து திரைப் படத்துறை வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த மனோரமா 1958 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் இயக்கிய “மாலையிட்ட மங்கை” திரைப்படத்தில் நடித்த முக்கிய வேடத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இவர் கதாநாயகியாக 1963 ஆம் ஆண்டு வெளிவந்த “கொஞ்சும் குமரி” என்ற படத்தில் நடித்துள்ளார். பொம்மலாட்டம், சூரிய காந்தி, பட்டிக்காடா பட்டணமா, கலாட்டா கல்யாணம், அன்பேவா, தில்லானா மேகானாம்பாள், சின்னத்தம்பி, உன்னால் முடியும் தம்பி, சம்சாரம் அது மின்சாரம், நடிகன் போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் இவரது நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது” என்றும் தமது இரங்கல் செய்தியில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் மனோரமா. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் என்னுடன் பல படங்களில் நடித்துள்ளார் மனோரமா. அவர் என்னுடன் நடித்து வெளிவந்த கந்தன் கருணை, கலாட்டா கல்யாணம் போன்ற படங்களில் அவருடன் நடித்த அனுபவங்கள் இன்றும் எனது நினைவில் பசுமையாக உள்ளது. என்னுடன் அவர் நடித்து அன்று வெளிவந்த பொம்மலாட்டம் திரைப்படத்தில் அவரது சொந்தக் குரலில் பாடிய “வா வாத்தியாரே வூட்டான்ட” என்ற பாடலும், சூரிய காந்தி படத்தில் அவர் பாடிய “தெரியாதோ நோக்கு” என்ற பாடலும் அன்று பட்டித் தொட்டிகள் அனைத்திலும் பிரபலமானது ஆகும். இத்துடன் 300க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார்” என்றும் ஜெயலலிதா நினைவுகூர்ந்துள்ளார்.

11-manorama111-300“இவர் திரைப்படத் துறையில் ஆயிரம் திரைப் படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். கலைத் துறையில் இவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, தேசிய விருது மற்றும் தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருது என எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர். மனோரமாவின் மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கு மிகப் பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. மனோரமாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தனது இரங்கல் அறிக்கையில் ஜெயலலிதா தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.