சென்னை – திமுக தலைவர் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருப்பவர்களுள் கவிஞர் வைரமுத்துவும் ஒருவர். அந்த நட்பின் அடிப்படையில் தான் கருணாநிதி, சமீபத்தில் நடந்த ‘வைரமுத்து சிறுகதைகள்’ புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தலைமை ஏற்றார். அந்த விழாவில் கலந்து கொண்ட மற்றொரு சிறப்பு விருந்தினர் நடிகர் கமல்ஹாசன் ஆவார்.
இந்த விழாவில் வைரமுத்து, ஒருமுறை கருணாநிதியின் வீட்டில் நடந்த சுவாரசிய சம்பவம் ஒன்றை மேடையில் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது:-
“ஒருமுறை கலைஞர் வீட்டில் பேசிக்கொண்டு இருந்தோம். ‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்ற விவாதம் அது. ‘எனக்குத் தெரியாது’ என்றேன். ஏனென்று எதிர்க் கேள்வி கேட்டார்கள். ‘ஏனென்றால் அது ரஜினிக்கே தெரியாது’ என்றேன். சிரித்துவிட்டனர்.”
“அடுத்த கேள்வி, ‘கமல் அரசியலுக்கு வருவாரா?’ என்றார் துரைமுருகன். அதற்கு, ‘நிச்சயம் வரமாட்டார்’ என்றேன். ‘எனக்குக் கொஞ்சம் நடிக்கத் தெரியும். அந்தளவுக்கு என்னால் நடிக்க முடியாது’ என்று கமல் சொன்னதைச் சொன்னேன். கலைஞர் குபீரென்று சிரித்துவிட்டார். கலைஞர், முதலில் ரசிகர். அப்புறம்தான் தலைவர்” என்று அவர் அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.