காஜாங் – காஜாங் சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட டேக்சி ஓட்டுநர் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த வாரம் சிறுவன் கடத்தப்பட்ட அன்று மாலை அச்சிறுவனை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தார் ஹனிசான் முகமட் ராட்சி என்ற டேக்சி ஓட்டுநர்.
ஆனால் அதற்கு மறுநாளே அவருக்கும் இந்த கடத்தலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரைக் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்தது காவல்துறை.
இந்நிலையில், அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று கூறி நேற்று வெள்ளிக்கிழமை அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
“நான் இதை இந்த சமுதாயத்திற்காகத் தான் செய்தேன். இனப்பாகுபாடு பார்க்கவில்லை. நான் அச்சிறுவனுக்கு உதவி செய்ததை எண்ணி வருந்தவில்லை. எப்போதும் உதவி செய்வேன்” என்று ஹனிசான் கூறியுள்ளார்.
அச்சிறுவனை கண்டுபிடித்த போது, தான் அது குறித்து காவல்துறையில் புகார் அளிக்காமல் நேரடியாக அவரது வீட்டில் கொண்டு போய் ஒப்படைத்தது தான் செய்த தவறு என்பதையும் டேக்சி ஓட்டுநரான ஹனிசான் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஹனிசான் நேற்று நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தவுடன் அவரது குடும்பத்தினரும், அச்சிறுவனின் குடும்பத்தினரும் அவருக்கு ஆறுதல் சொல்லியதோடு, அவரது செயலுக்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
இதனால் அவ்விடம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகக் காணப்பட்டது.
கடந்த வாரம் ஹனிசான் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தவுடன் அவரை ஒரு கதாநாயகனாக சித்தரித்து மிகவும் பாராட்டித் தள்ளிய இணையவாசிகள், அதற்கு மறுநாள் அச்சம்பவத்தில் அவர் தான் முதல் நிலைக் குற்றவாளியாக காவல்துறை கருதியபோது, அதிர்ச்சியடைந்தனர்.
அதே இணையவாசிகள் அவரைக் கடுமையாக விமர்சித்து கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினர். இந்நிலையில், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஹனிசான் நிரூபித்துள்ளதால், மீண்டும் மக்கள் மத்தியில் நாயகனாகியுள்ளார் ஹனிசான்.
அரசாங்கமோ, இஸ்லாமிய அமைப்புகளோ, சீன அமைப்புகளோ அல்லது இவை இரண்டுமோ அவரது பொறுப்புணர்ச்சியைப் பாராட்டி விருதுகள் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.