கோலாலம்பூர் – கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் மலேசியாவில் இதுவரை மொத்தம் 3,937 குழந்தைகள் (6 முதல் 8 வயது) காணாமல் போயிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை துணை உள்துறை அமைச்சர் மசீர் கூஜாட் இன்று வெளியிட்டுள்ளார்.
ஜோகூரில் 681 குழந்தைகள் காணாமல் போன சம்பவங்களும், சிலாங்கூரில் 538 சம்பவங்களும், கெடாவில் 474 சம்பவங்களும் அதே காலகட்டத்தில் பதிவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று குழந்தைகள் கடத்தல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மசீர், “காவல்துறையின் புள்ளிவிவரங்களின் படி, கடந்த 2014-ம் ஆண்டு மொத்தம் 2,015 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். 2015-ம் ஆண்டு 1,782 குழந்தைகளும், இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் 140 குழந்தைகளும் மாயமாகியுள்ளனர்”
“அவர்களில் 2014-ம் ஆண்டு 474 சிறுவர்களும், 2015-ம் ஆண்டில் 457 சிறுவர்களும், இந்த ஆண்டு ஜனவரில் 46 சிறுவர்களும் காணாமல் போயுள்ளனர். அதே வேளையில், 2014-ல் 1,536 சிறுமிகளும், 2015-ம் ஆண்டு 1,310 சிறுமிகளும், இந்த ஆண்டு ஜனவரியில் 94 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்”
“இனரீதியாகப் பார்த்தால், 2,691 மலாய் குழந்தைகளும், 241 சீனக் குழந்தைகளும், 409 இந்தியக் குழந்தைகளும், 596 மற்ற இனத்தைச் சேர்ந்த குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குழந்தைகள் மாயமானதற்கும், மனிதக் கடத்தலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் மசீர் உறுதியளித்துள்ளார்.
காவல்துறை ஒருபுறம் தனது கடமையைச் செய்யட்டும். ஆனால் பெற்றோர்களே.. குழந்தைகளின் மீது தனிக் கவனம் செலுத்தி அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்களது கடமை.
அன்பையும், பாசத்தையும் கொட்டி வளர்க்கும் குழந்தைகள் காணாமல் போய்விட்டால், பெற்றோரின் மன வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டுத் தவிப்பது வாழ்க்கையே முடிந்துவிடுவது போன்ற நரக வேதனை.