காஜாங்- காஜாங்கைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவமானது ஒரு வாடகை வண்டி (டேக்சி) ஓட்டுநருக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத இருண்ட தருணங்களையும், எண்ணி எண்ணி மகிழக்கூடிய அனுபவங்களையும் ஒருங்கே தந்துள்ளது.
அந்த டேக்சி ஓட்டுநரின் பெயர் ஹனிசான் முகமட். கடந்த அக்டோபர் 9ஆம் தேதி காஜாங் சுங்கை சுவா பகுதியில் வைத்து 5 வயது சீன சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டான்.
எனினும் கடத்தல் சம்பவம் நிகழ்ந்த அடுத்த 24 மணி நேரத்துக்குள் அதில் ஈடுபட்ட 3 ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர். பிணைத் தொகையாக கடத்தல்காரர்கள் பெற்ற 3 லட்சம் ரிங்கிட் தொகையும் கைப்பற்றப்பட்டது.
கடத்தப்பட்ட 8 மணி நேரத்திற்குப் பின்னர் அச்சிறுவனை டேக்சி ஓட்டுநர் ஒருவர் அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தார். அந்த டேக்சி ஓட்டுநர் வேறு யாருமல்ல, ஹனிசான் முகமட் தான்.
நாட்டில் சீன சமுதாயத்திற்கும், மலாய் சமூகத்தினருக்கும் இடையில் பதட்டம், போராட்டம் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், ஒரு மலாய்க்கார டாக்சி ஓட்டுநர் சீன சிறுவனைக் காப்பாற்றிக் கொண்டு வந்து சேர்த்தது
ஆனால் மனித நேயத்துடன் அவர் செய்த இந்த உதவியே அவருக்கு வினையாக அமைந்தது. சிறுவன் கடத்தப்பட்டதில் ஹனிசானுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதிய காவல்துறை, அவரையே முதல் குற்றவாளியாகக் கருதி, கைது செய்தது. தன் மீதான குற்றச்சாட்டை அடியோடு மறுத்தார் ஹனிசான்.
சாலையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த சிறுவனைக் கண்டு அவனிடம் விசாரித்ததாகவும், சிறுவன் கடத்தப்பட்ட பின் சமூக வலைதளங்களில் வெளியான அவனது புகைப்படத்தைக் கொண்டு அவனை அடையாளம் கண்டுகொண்டதாகவும் ஹனிசான் கூறினார்.
தீவிர விசாரணைக்குப் பின்னர் அவருக்கும் கடத்தலுக்கும் தொடர்பில்லை என தெரிய வந்ததையடுத்து போலீசார் அவரைக் கடந்த வெள்ளிக்கிழமை விடுவித்தனர். முன்னதாக காஜாங் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட அவர், தாம் கைது செய்யப்பட்டதால் தனது குடும்பத்தார் வெட்கித் தலைகுனியும் நிலை ஏற்பட்டுவிட்டதாக மனக் கலக்கத்துடன் போலீசாரிடம் புலம்பினார்.
“என்னால் என் குழந்தைகளுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. நான் சாதாரண டேக்சி ஓட்டுநர். நான் எந்தத் தவறும் செய்யவில்லை” என்றும் ஹனிசான் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நீதிமன்றம் அவரை விடுவித்த பின்னர் மனம் நிறைந்த நிம்மதியுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சமூகத்தின் மீதான அக்கறையினாலேயே சிறுவனைப் பொறுப்புடன் பெற்றோரிடம் ஒப்படைத்ததாகத் தெரிவித்தார்.
கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சிறுவன்
“நான் இனங்களைப் பொருட்படுத்தியதில்லை. சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையைச் செய்தேன். அச்சிறுவனுக்கு உதவியதால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து வருத்தப்படவில்லை. நான் தொடர்ந்து சமூகத்துக்கு உதவுவேன். போலீஸ் காவலில் இருந்தபோது எனக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தாருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். காவல்துறையினர் என்னை நன்றாகவே நடத்தினர். சிறுவனைக் கண்டபிறகு காவல்துறைக்கு தகவல் தராதது தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனினும் எனக்கு ஏற்பட்ட அனுபவமானது காவல்துறையுடன் இணைந்து செயல்படுவது தொடர்பில் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தாது என நம்புகிறேன்” என்றார் ஹனிசான்.
இதையடுத்து குடும்பத்தார் கண்ணீர் மல்க அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர். முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் கடத்தப்பட்ட சிறுவனின் குடும்பத்தாரும் ஹனிசானின் வீட்டாரும் உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டனர்.
தனது மகன் குறித்து தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், ஆள் கடத்தலில் ஈடுபடும் அளவிற்கு தன் மகன் மோசமான நபர் அல்ல என்றும் ஹனிசானின் தந்தை கண்ணீருடன் குறிப்பிட்டார்.
சிறுவன் கடத்தல் தொடர்பில் முதலில் வில்லனாகப் பார்க்கப்பட்ட 41 வயது ஹனிசான், தற்போது பொதுமக்கள் மத்தியில் கதாநாயகனாக மதிக்கப்படுகிறார்.
-செல்லியல் தொகுப்பு