கோலாலம்பூர்- மலேசியா குரோனிக்கல் இணையதளம் கடந்த வெள்ளிக்கிழமை காலை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உள்நாட்டில் முடக்கப்பட்டது.
இது தொடர்பாக மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடமிருந்து எந்தவித தகவலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என அந்த இணையதளத்தின் ஆசிரியர் வோங் சூன் மெய் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை நாடாளுமன்ற பட்ஜெட் உரைக்கு சில மணி நேரம் முன்னதாக தங்கள் இணையதளம் முடக்கப்பட்டது என்றார் அவர்.
www.malaysia-chronicle.com என்ற அந்த இணையதளத்திற்குள் நுழைய முற்பட்டால், “மலேசிய தேசிய சட்டங்களை மீறியதால் இந்த இணையதளம் உள்நாட்டில் பயன்பாட்டில் இல்லை” என்ற அறிவிப்பு தென்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தை மையமாகக் கொண்டு செயல்படும் சரவாக் ரிப்போர்ட் இணையதளம் மலேசியாவில் முடக்கப்பட்டது.
1எம்டிபி குறித்து அந்த இணையதளத்தில் வெளியான அறிக்கை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்தது என்ற குற்றச்சாட்டின் பேரில் அந்த இணையதளம் மீது தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது.
எனினும் திறன்பேசிகள் மற்றும் கணினிகளில் நெட்வொர்க் குறியீடுகளில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் சரவாக் ரிப்போர்ட் இணையதளத்தை பார்வையிட முடிகிறது.
அதே போன்று மலேசிய குரோனிக்கல் தளத்தை எவ்வாறு பார்வையிடுவது என்பதற்கான குறிப்புகள் அதன் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.