சிப்பாங் – கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலிண்டோ விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த மின் புகைபிடிப்பு கருவியின் பேட்டரி திடீரென வெடித்து தீப்பற்றியது. இதனால் பயணிகள் பீதிக்குள்ளாகினர்.
சனிக்கிழமை மாலை கோத்தகினபாலுவில் இருந்து கேஎல்ஐஏ2 விமான நிலையம் நோக்கி அந்த விமானம் வந்து கொண்டிருந்தது.
அதில் இருந்த பயணி ஒருவர் விமானத்தினுள் இருக்கும் திரையில் காணொளி காட்சி ஒன்றை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.
இச்சமயம் அவர் தன் பையில் வைத்திருந்த மின் புகைப்பிடிப்பு (e-cigarette) கருவியின் பேட்டரி ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அக்கருவியில் தீப்பற்றியது. இதைக் கண்ட சக பயணிகள் பெரும் பீதிக்குள்ளாயினர்.
“இச்சம்பவத்தில் அந்தப் பயணியின் தொடையிலும், இடது கையிலும் தீக்காயம் ஏற்பட்டது. அவர் தனது பையை தொடைகளின் மீது வைத்திருந்தார். திடீரென புகைப்பிடிப்பு கருவி தீப்பற்றியதால் அவருக்கு காயம் ஏற்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகளில் ஒருவர் மருத்துவர் என்பதால் காயம் அடைந்தவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் விமான ஊழியர்களும் துரித கதியில் செயல்பட்டு தீயை அணைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து அந்த விமானம் இரவு 8.44 மணிக்கு கோலாலம்பூரில் பத்திரமாக தரையிறங்கியது” என்று சிப்பாங் காவல்துறை தலைமை உதவி ஆணையர் அப்துல் அசிஸ் அலி தெரிவித்தார்.
காயமடைந்த பயணி இச்சம்பவம் குறித்து காவல்துறையில் விளக்கம் அளித்துள்ள நிலையில், மலிண்டோ விமான நிறுவனம் எந்தவித புகாரும் அளிக்கவில்லை.