சென்னை – மது ஒழிப்பிற்கு எதிராகவும், டாஸ்மாக்கிற்கு எதிராகவும் பாடல்களை இயற்றி அதனை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீதி நாடகமாக நடத்தி வந்த பாடகர் கோவனை, தேசத் துரோக சட்டப்பிரிவில் காவல்துறை கைது செய்துள்ளது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அ.தி.மு.க. அரசின் இந்த ஜனநாயக விரோதச் செயலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதோடு, உடனடியாக கைது செய்யப்பட்ட பாடகர் கோவனை விடுதலை செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.”
“மதுவினால் ஏற்படும் தீமைகளையும், சமூக அவலங்களையும், அ.தி.மு.க. ஆட்சியின் சட்ட விரோதச் செயல்களையும் கண்டித்து ஊருக்கு ஊர் பாடல்கள் மூலமாக பிரச்சாரம் செய்த மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவன் அவர்களை திருச்சியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள். அவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ (தேச துரோகம்), 153-ஏ (சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல்) என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கோவனை எங்கே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படவில்லை. அவரைச் சந்திக்கவும் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.”
“ஜனநாயகத்தின் குரல்வளை ஜெயலலலிதா ஆட்சியில் எப்படியெல்லாம் நெரிக்கப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை.” – இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.