சென்னை – கடந்த 1965-ம் ஆண்டில் ‘காக்கும் கரங்கள்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார். அவருக்கு சினிமாவில் இது பொன்விழா ஆண்டு.
அதைக் கொண்டாட சிவக்குமார் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், தனது தந்தை குறித்து நடிகர் சூர்யா விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில், சிறுவயதில் தந்தை தங்களுக்குக் கற்றுக் கொடுத்த பாடங்களை நினைவு கூர்ந்து பகிர்ந்துள்ளார்.
அதில் சூர்யா கூறியிருப்பதாவது:-
“அப்ப நான் சூர்யா இல்லை… சரவணன். படிச்சுட்டு இருந்தேன். வேற எங்கேயோ இருந்த கோபத்தை ‘சாப்பாடு சரியில்லை’னு சமையல்காரர்கிட்ட காமிச்சுட்டேன். அப்போ வீட்ல விருந்தினர்களும் இருந்தாங்க. ‘மன்னிப்பு கேள். இல்லைனா இங்க சாப்பிடக் கூடாது’னு அப்பா என்னை அதட்டினார். ‘உங்க வயசுக்கு அப்படிப் பேசியிருக்கக் கூடாது. மன்னிச்சுருங்கய்யா’னு சொல்லிட்டு, நான் அந்த இடத்துல இருந்து விலகப் பார்த்தேன். ஆனா, ‘கோவிச்சுட்டுப் போக உனக்கு உரிமை கிடையாது. என்கூடவே உட்கார்ந்து சாப்பிடு. கெஸ்ட் முன்னாடி இது உனக்கு அசிங்கம்னா, நீ பண்ணின விஷயம் அந்தப் பெரியவருக்கும் அசிங்கம்தானே?’னு அப்பா சொன்னார். பசுமரத்தாணி மாதிரி அப்போ மனசுல பதிஞ்சது இன்னும் என்னை வழிநடத்திட்டே இருக்கு” என்று தெரிவித்துள்ளார்.