கோலாலம்பூர்- பொது கணக்குக் குழுவில் இடம்பெற்றுள்ள தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் நஜிப்புக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரிங்கிட் 2.6 பில்லியன் தொகையின் வழி ஆதாயமடைந்துள்ளனரா? என்பதை தெரிவிக்க வேண்டுமென லிம் கிட் சியாங் வலியுறுத்தி உள்ளார்.
ஏனெனில் 1எம்டிபி விவகாரம் குறித்து பொதுக் கணக்கு குழு தான் தற்போது விசாரணை நடத்தி வருகிறது என கிட் சியாங் சுட்டிக்காட்டி உள்ளார்.
கடந்த 13ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர் தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளுக்கு நிதி அளிக்கப்படும் என பிரதமர் நஜிப் உறுதியளித்தார் என மசீச முன்னாள் தலைவர் டாக்டர் சுவா சோய் லெக் அண்மையில் கூறியிருந்தார். இதையடுத்தே மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளார் லிம் கிட் சியாங்.
“பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்கள் அடுத்து சந்திக்கும்போது, நான் எழுப்பிய சந்தேகம் குறித்து விவாதிப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். சுவா வெளியிட்ட தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 2013 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர்கள் அனைவருக்குமே 2.6 பில்லியன் தொகையோடு தொடர்புள்ளதா என்பது தெரிய வேண்டும்,” என லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.
இது உண்மையெனில் அந்தத் பொதுத் தேர்தல் பிரசாரத்துக்காக எவ்வளவு தொகை பெற்றனர் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிவிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தி உள்ளார்.