Home Featured நாடு “ஆமாம் சாமியாக இருக்கமாட்டேன்! சமுதாயத்துக்காக, கட்சிக்காக என்றும் குரல் கொடுப்பேன்” – சிறப்பு நேர்காணலில் டி.மோகன்!

“ஆமாம் சாமியாக இருக்கமாட்டேன்! சமுதாயத்துக்காக, கட்சிக்காக என்றும் குரல் கொடுப்பேன்” – சிறப்பு நேர்காணலில் டி.மோகன்!

958
0
SHARE
Ad

Mohan T - Datukகோலாலம்பூர் – “மஇகாவின் தேசிய உதவித் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், எந்த ஒரு தலைவருக்கும் ஆமாம் சாமியாக இருக்க மாட்டேன். கட்சிக்கும், சமுதாயத்திற்காகவும், குரல் கொடுப்பதுதான் எனது முதல் கடமையாக இருக்கும்” என டத்தோ டி.மோகன் செல்லியலுக்கென வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இன்னும் மூன்றே நாட்கள் இருக்கும் நிலையில் சூடு பிடித்திருக்கும் மஇகா தேர்தல்களில், தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டி.மோகனிடம் செல்லியல் நடத்திய சிறப்பு நேர்காணலில் தான் எதிர்நோக்கும் கடுமையான போட்டி குறித்து பல விவரங்களை மோகன் பகிர்ந்து கொண்டார்.

“எனது இந்த போராட்ட குணத்தை எனது கடந்த கால அரசியல் பயணத்திலிருந்து பேராளர்கள் இதுவரை புரிந்து கொண்டிருப்பார்கள். இதற்கு முன்பிருந்த தலைமைத்துவத்துடன் சமரசம் செய்து கொள்ளவும், அதற்காக பதவிகளை பரிமாறிக் கொள்ளவும், வாய்ப்புகள் என் முன்னே இருந்தும், இறுதிவரை நான் நியாயத்துக்காகப் போராடினேன்” என்றும் டி.மோகன் செல்லியலிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

Mohan T-with Childrenஅரசியல் போராட்டங்களுக்கிடையில் டி.மோகனின் சமூகப் பணிகளும் மஇகாவில் பிரசித்தம் 

“மீண்டும் மறுதேர்தல்கள் நடத்தப்பட நான் எனது குழுவினருடன் போராடி வந்திருந்தாலும், இந்த முறை உதவித் தலைவர் போட்டியிலிருந்து ஒதுங்கிக்கொள்ளவே நான் நினைத்திருந்தேன். ஆனால், இளைஞர் பகுதியில் என்னோடு இணைந்திருந்த அரசியல் சகாக்கள், கட்சியில் பல்வேறு நிலைகளிலும் இருந்த கிளை, தொகுதித் தலைவர்கள், கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் என பல முனைகளில் இருந்தும் நான் மீண்டும் இந்த தேர்தலில் நிற்க வேண்டும் என அன்புடன் வற்புறுத்திய காரணத்தால்தான் மீண்டும் நான் உதவித் தலைவருக்கான தேர்தல் களத்தில் பேராளர்களின் முன்னே நிற்கின்றேன்” என்றும் டி.மோகன் தெரிவித்தார்.

Mohan T-Subra-Saravananவிளையாட்டுத் துறையில் அதிகமான ஈடுபாடு, காற்பந்து போட்டிகளை நடத்துவது, இந்தியர்களை விளையாட்டுத் துறையில் ஊக்குவிப்பது போன்ற பணிகளின் காரணமாகவும் மோகனின் செல்வாக்கு இந்திய இளைஞர்களின் மத்தியிலும், மஇகா இளைஞர் பகுதியின் மத்தியிலும் அதிகரித்துள்ளது.

“வெற்றி வாய்ப்புகள் இந்த முறை எப்படி?”

இந்த முறை நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்கியிருக்கும் டி.மோகனிடம் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன என்ற கேள்வியை முன்வைத்தபோது “நான் செல்லும் இடம் எங்கும் எனக்கான ஆதரவு அலைகள் பேராளர்களிடையே பெருகி வருவதைப் பார்க்கின்றேன். இந்த முறை வெற்றி வாகை சூட முடியும் என நம்புகின்றேன். முதலாவது, இரண்டாவது என்பதில் எல்லாம் எனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. மூன்று உதவித் தலைவர்களில் ஒருவராக வெல்வதுதான் எனது நோக்கமே தவிர, முதலாவதாக வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் இந்தப் பிரச்சாரப் போராட்டத்தில் இறங்கவில்லை” என்றார் மோகன்.

இந்த முறை மோகனின் வெற்றிவாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவே, மஇகா தேர்தல் களத்தை உன்னிப்பாகக் கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்களும் கணிக்கின்றனர்.

Mohan T -Khairy-இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடினுடன் டி.மோகன்…

“அப்படியே நான் வென்று வந்தாலும், யார் தலைவராக இருந்தாலும், சமுதாயப் பிரச்சனைகளுக்காகவும், கட்சி நலனுக்காகவும் நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். அதில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். இது என்னை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்” என்றும் உறுதி தோய்ந்த தொனியுடன் குறிப்பிடுகின்றார் மோகன்.

“இந்த முறை வெற்றி வாய்ப்பு இருப்பதாக நான் கருதினாலும், கடந்த முறை உதவித் தலைவர் தேர்தலில் நான் அடைந்த தோல்வியின் மூலம் பல நல்ல பாடங்களைக் கற்றுக் கொண்டேன். அந்த அனுபவங்களைக் கொண்டு இந்த முறை கொஞ்சம் கவனமுடன், அடியெடுத்து வைக்கின்றேன். ஒரு சிலரின் ஒரேயடியான புகழுரைகளால் நான் மயங்கி விடவில்லை. அதே சமயம் ஒரு சிலர் கூறும் சாதகமற்ற கருத்துக்களையும் செவிமெடுத்துக் கொள்கின்றேன். அதற்காக, வருந்துவதும் இல்லை. துவண்டு விடுவதும் இல்லை. குறை சொல்பவர்களை நிந்திப்பதும் இல்லை. மஇகாவில் எனது நீண்ட கால அரசியல் பயணமும், கடந்த முறை கண்ட தோல்வியினால் பெற்ற அனுபவங்களும் என்னைப் பக்குவப்படுத்தி இருக்கின்றன என்றுதான் கூறவேண்டும்” என்றும் இந்த தடவைக்கான உதவித் தலைவருக்கான தேர்தல் களம் குறித்து மோகன் குறிப்பிட்டார்.

டி. மோகன் தன்னடக்கத்தோடு இவ்வாறு கூறினாலும், இந்த முறை அவர் வெல்வது உறுதி என்றும் அதிலும் முதலாவது உதவித் தலைவராக வெற்றி வாகை சூடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.

-இரா.முத்தரசன்

நாளை : தேசிய உதவித் தலைவர் தேர்தலில் இந்த முறை டத்தோ டி.மோகன் ஏன் வெல்ல முடியும் என்பதற்கான காரணங்கள்!