ஷாங்காய் – சொந்தத் தயாரிப்பில் முதல் பெரிய வகை பயணிகள் ஜெட் விமானத்தை உருவாக்கியிருக்கிறது சீனா. கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்து வந்த அந்த விமானத்தில் பெரும்பாலான பாகங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவையாகும்.
அதேவேளையில் அதில் சில வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பாகங்களும் இருப்பதாக சீன செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
சி-919 என்ற இந்த விமானம், விமான விற்பனைச் சந்தையில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் விமான தயாரிப்பு நிறுவனங்களான போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய நிறுவனங்களுடன் போட்டியிட வருகின்றது.
இந்த விமானம் நேற்று திங்கட்கிழமை ஷாங்காய் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
158 பயணிகளை ஏற்றிக் கொண்டு 4,075 கிலோ மீட்டர் வரை பறந்து செல்லக்கூடிய இந்த சி-919 விமானம், அடுத்த ஆண்டு முதல் சோதனை முறையில் பறக்கவிடப்படுகிறது.
இந்த விமானம் சந்தைக்கு வந்தால், போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இதனிடையே, இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள சீனப் போக்குவரத்துத் துறைக்கு அதிபர் ஜீ ஜின்பிங் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.