Home Featured தமிழ் நாடு திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலினே தகுதியானவர் – கருணாநிதி திடீர் அறிவிப்பு!

திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலினே தகுதியானவர் – கருணாநிதி திடீர் அறிவிப்பு!

558
0
SHARE
Ad

34568_L_karunanidhi-stalinதிமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின்தான் தகுதியானவர் என அக்கட்சியின் நடப்புத் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதை தாம் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், இதுவே உண்மை என்று பிரபல ஆங்கில நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுகவில் இருந்து மு.க.அழகிரி விலகுவதற்கு காரணமே, அக்கட்சியின் அடுத்த தலைவராக ஸ்டாலின் முன்னிறுத்தப்படக் கூடாது என்பதுதான். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் கூட, “கருணாநிதி இருக்கும் வரை திமுகவுக்கு அவரே தலைவர்” என்று அழகிரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

#TamilSchoolmychoice

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மு.க.ஸ்டாலினை இடித்துரைக்கவும், கிண்டல் செய்யவும் அவர் தவறுவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், ஸ்டாலின் தான் கட்சித் தலைவர் பதவிக்கு உகந்தவர் என கருணாநிதி வெளிப்படையாகவும், தெளிவாகவும் கூறியிருப்பது அழகிரி வட்டாரங்களில் சலசலப்பையும், ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.

சரி… கருணாநிதி அப்பேட்டியில் அப்படி என்னதான் கூறியுள்ளார்?

“திமுக ஜனநாயக இயக்கமாகும். இங்கு பெரும்பாலானவர்களின் கருத்துக்கு ஏற்பவே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நான் தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுத்து அறிவிப்பது இல்லை. கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளையே அறிவிக்கிறேன். கட்சியின் பொதுக் குழுவும், செயற்குழுவும் கூடி மேற்கொள்ள வேண்டிய முடிவை நான் ஒருவன் மட்டும் தனித்து எடுத்து அறிவித்து விட முடியாது.”

“தற்போதைய சூழ்நிலையில் நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் கூட மு.க.ஸ்டாலின்தான் கட்சித்தலைவர் பதவிக்கு தகுதியானவர். இந்த வெளிப்படையான உண்மை மக்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும்,” என்று கருணாநிதி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் 2ஜி விவகாரம் திமுகவுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் ஸ்டாலின் குறித்த அவரது கருத்தால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.