கோலாலம்பூர் – அருள் கந்தா, டோனி புவா இடையே நேரடி விவாதம் நடைபெற்றால், நாடாளுமன்ற சபாநாயகர் பதவியில் இருந்து விலகப் போவதாக பண்டிகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1எம்டிபி குறித்து பொதுக் கணக்குக் குழு நடத்தி வரும் விசாரணைகளில் இருந்து விலகுவதாக இருவரும் அறிவித்தால் மட்டுமே, அவர்களுக்கு இடையேயான விவாதம் நடத்தப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இத்தகைய முடிவுக்கு வரும் முன்னர் அரசாங்கத்திடம் கலந்தாலோசிக்கப்பட்டதா? என ஐசெக எம்.பி., அந்தாணி லோக், நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், சபாநாயகர் என்ற முறையில், நாடாளுமன்ற விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றன என்பதை தாம் உறுதி செய்ய வேண்டியுள்ளது என்றார்.
“இது தொடர்பாக அரசாங்கத்துக்கு வேறு திட்டங்கள் இருக்கக் கூடும். என்னைப் பொறுத்தவரையில், நேரடி விவாதத்தை நடத்த அவர்கள் முற்படுவார்களேயானால், நாடாளுமன்ற சபாநாயகர் பதவியை விட்டு விலகுவேன்” என்றார் பண்டிகர்.
முன்னதாக, சபாநாயகர் எப்படியும் தலையிட்டு தடுத்துவிடுவார் என்பதை நன்கு அறிந்திருந்த காரணத்தினாலேயே தேசிய முன்னணி உறுப்பினர்கள் மேற்படி விவாதத்துக்கு ஒத்துக் கொண்டனர் என்று அந்தோணி லோக் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.