கோலாலம்பூர்- முன்னாள் பிரதமர் துன் மகாதீரிடம் நடத்தப்பட்ட விசாரணை ஏறத்தாழ முடிவுக்கு வந்திருப்பதாக துணை ஐஜிபி தெரிவித்துள்ளார். விசாரணை தொடர்பான அறிக்கை, அடுத்து துணை அரசு வழக்கறிஞரின் அலுவலகத்துக்கு ஓரிரு வாரங்களுக்குள் அனுப்பப்படும் என்றும் காவல் துறையின் துணைத் தலைவர் (துணை ஐஜிபி) டத்தோஸ்ரீ நூர் ரஷிட் இப்ராகிம் கூறியுள்ளார்.
“அரசு வழக்கறிஞர் அலுவலகத்துக்கு அறிக்கையை அனுப்பும் முன்னர், விசாரணையை முழுமையாக முடிப்போம். தற்போது விசாரணை ஏறத்தாழ முடிந்துள்ளது. எனவே இயன்ற விரைவில்.., அதாவது ஓரிரு வாரங்களில் இந்த நடவடிக்கை முழுமை பெறும்” என்றார் நூர் ரஷிட்.
மகாதீரிடம் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தப்பட்டது. அது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே நூர் ரஷிட் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை புக்கிட் அமானின் குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் மகாதீரை சந்தித்து, அவரது வாக்குமூலத்தைப் பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், பெர்சே 4 பேரணியில் பங்கேற்றது உட்பட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் மகாதீரிடம் விளக்கம் பெறப்பட்டதாகத் தெரிவித்தார்.