Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: “தூங்காவனம்” – ஆங்கிலப் படத்துக்கு நிகரான முதல் பாதி! ஒரே இடத்தைச் சுற்றுவதால் தொய்வடையும்...

திரைவிமர்சனம்: “தூங்காவனம்” – ஆங்கிலப் படத்துக்கு நிகரான முதல் பாதி! ஒரே இடத்தைச் சுற்றுவதால் தொய்வடையும் பின் பாதி!

628
0
SHARE
Ad

Toongavanam-posterகோலாலம்பூர் – ஆங்கிலப் படத்திற்கு நிகராக தமிழில் படம் எடுக்க மாட்டேன் என்கின்றார்களே என்ற தமிழ் சினிமா இரசிகர்களின் புலம்பலுக்குப் பொருத்தமான பதிலாக வந்திருக்கின்றது கமலஹாசனின் ‘தூங்காவனம்’.

ஒரு நிமிடம் கூட உங்களுக்குத் தூக்கத்தை வரவழைக்காத – கண்ணை அயர வைக்காத அளவுக்கு விறுவிறுப்பான திரைக்கதையமைப்பு. பாடல்கள் இல்லை. அம்மா-அப்பா-தங்கை, உணர்ச்சிக் கொந்தளிப்புகள் இல்லை. காதல் காட்சிகள் இல்லை. கதாநாயகனுக்கு கதாநாயகி இல்லை –

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். தமிழ்ப்படத்தின் அத்தனை இலக்கணங்களையும் முறியடித்து வெளிவந்திருக்கின்றது தூங்காவனம். அந்தத் துணிச்சலுக்காக பாராட்ட வேண்டும் என்பதோடு, கண்டிப்பாகப் பார்த்து ஆதரவும் தரவேண்டும் என்ற அளவுக்கு சினிமாத் தொழில்நுட்பங்களும், நடிப்பும் குவிந்து கிடக்கின்றது இந்தப் படத்தில்!

#TamilSchoolmychoice

Toongavanam-Kamalஆனால்! சராசரி தமிழ்ப்பட இரசிகன் ஒரு கமல் படத்தில் எதிர்பார்க்கும் தமிழ்ப்படப் பசிக்கான தீனியைப் படம் வழங்குகின்றதா என்பது கேள்விக் குறிதான்!

‘ஸ்லீப்லஸ் நைட்ஸ்’ (Sleepless Nights) என்ற பிரெஞ்சுப் படத்தின் உரிமைகளை நேரடியாக வாங்கி, காட்சிக்கு காட்சி அப்படியே சட்டபூர்வமாகச் ‘சுட்டிருக்கின்றார்கள்’ என்பது ஒன்றுதான் நெருடல்!

கதை – திரைக்கதை

முதல் காட்சியில், ஒரு பை நிறைய போதைப் பொருள் கடத்திக் கொண்டு செல்லப்படும்போது இரண்டு பேர் முகமூடி போட்டுக் கொண்டு அதைத் தடுத்து திருடுகின்றார்கள். அப்போது நடக்கும் சண்டையில் கடத்தல்காரன் கொல்லப்பட, அந்த போதைப் பொருள் பையைத் திருடிவிட்டு தப்பித்துச் செல்லும் இருவரின் முகமூடிகள் விலகும்போது, அவர்கள் கமலஹாசன், யூகிசேது என்பதும் இருவருமே போலீஸ்காரர்கள் என்பதும் காட்டப்படுகின்றது.

Thoongavanam-Kamal-Prakash Rajஅதன் பின்னர் விரியும் திரைக்கதையில் ஏன் போலீஸ்காரரான கமலே, போதைப் பொருளைத் திருடுகின்றார் என்பது கொஞ்சம் கொஞ்சமாக காட்டப்படும் வேளையில், அந்தப் போதைப் பொருளைக் கடத்திய கும்பலின் தலைவனான பிரகாஷ் ராஜ், கமலஹாசனின் பதின்ம வயது மகனைக் கடத்திச் சென்று தனது இரவு உல்லாச விடுதியில் வைத்துக் கொண்டு, போதைப் பொருளை ஒப்படைத்து விட்டு, மகனைக் கூட்டிச் செல்லுமாறு மிரட்டுகின்றார்.

கமல் ஏற்கனவே விவாகரத்து செய்துவிட்ட டாக்டர் மனைவி (பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்து அசத்திய ஆஷா சரத்) மகன் எங்கே என்று நச்சரிக்க, ஒரே மகனைக் காப்பாற்ற வேண்டிய பாசத்தினால், தான் திருடிய போதைப் பொருளை எடுத்துக் கொண்டு பிரகாஷ் ராஜின் இரவு விடுதிக்குச் செல்கின்றார் கமல்.

அவரைப் பின் தொடர்ந்து, அவரை உளவுபார்க்க அந்த இரவு விடுதிக்குள் நுழைகின்றது போலீசின் மற்றொரு பிரிவைச் சேர்ந்த கிஷோர், திரிஷா கூட்டணி.

அதன் பிறகு அந்த ஓர் இரவுக்குள் அந்த இரவு விடுதிக்குள் நடக்கும் பரபரப்பான திருப்பங்கள், சம்பவங்கள்தான் படம்.

Thoongavanam-Movie crew-‘தூங்காவனம்’ படக்குழுவினர் – (இடமிருந்து) கிஷோர், பிரகாஷ்ராஜ், திரிஷா, கமலஹாசன், இயக்குநர் எம்.ராஜேஷ் செல்வா

இந்த இரவுக்குள் கமல் போதைப் பொருளை மறைத்து வைப்பதும், பின்னர் அதனை இழப்பதும், பிரகாஷ் ராஜ் மிரட்டுவதும், பிரகாஷ் ராஜிடம் போதைப் பொருளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சம்பத், பிரகாஷ் ராஜை மிரட்டுவதுமாக, விறுவிறுப்பாக நகர்கின்றது திரைக்கதை.

இறுதியில் கமல் தனது மகனைப் பிரகாஷ் ராஜ் பிடியிலிருந்து காப்பாற்றினாரா? போதைப் பொருள் பை என்னவானது? போதைப் பொருளைத் திருடும் கமலின் எதிர்மறையான நடவடிக்கைகள் ஏன் என்பதற்கெல்லாம் பதில் சொல்லி படம் முடிகின்றது.

படத்தின் பலம் – கமல்-பிரகாஷ் ராஜ்-திரைக்கதை

படத்தின் ஒட்டு மொத்த பலமும் முழுக்க முழுக்க அதன் திரைக்கதைதான். பாடல்கள் இல்லை, நகைச்சுவைக்கென தனி கிளைக் கதைகள் இல்லை. வழக்கமான தமிழ்ப்பட அம்சங்கள் எதுவுமின்றி பின்னப்பட்டிருக்கின்றது திரைக்கதை.

கமல் என்ற நடிப்பு யானைக்கு நடிப்பு என்று வரும்போது, இந்தப் படம் சோளப் பொரிதான் என்றாலும், மனைவியின் நச்சரிப்பைத் தாங்கிக் கொள்வது, மகனிடம் காட்டும் பாசம், அதற்காக உயிரையும் பொருட்படுத்தாமல் போராடுவது, வித்தியாசமாக திரிஷாவிடம் கட்டிப் பிடித்து போலீஸ் சண்டை போடுவது, இடையிடையே வெடிச் சிரிப்பு உண்டாக்கும் வண்ணம் பிரயோகிக்கப்படும் அவரது சில வசனங்கள், போதைப் பொருள் காணாமல் போகும்போது ஏற்படும் பதட்டம், மகனைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் விரக்தி, இயலாமை, – இப்படி பல பரிமாணங்களை தனக்குக் கிடைத்த குறுகிய வட்டத்திற்குள் காட்டி கமல்-கமல்தான் என அசத்துகின்றார்.

60 வயதைத்தாண்டியும் இன்னும் நடுத்தர வயது போலீஸ் அதிகாரியாக அவர் காட்டும் கம்பீரமும், மிடுக்கும் பிரமிக்க வைக்கின்றது.

அவருக்கு ஈடு கொடுத்து, சில இடங்களில் அவரையே மிஞ்சுகின்றார் பிரகாஷ்ராஜ்.

இரவு விடுதி முதலாளியாக போதைப் பொருளைக் கேட்டு மிரட்டும் பிரகாஷ்ராஜ், அதே போதைப் பொருளைக் கேட்டு வரும் சம்பத்திடம் பணிந்து குழைவதும், தன் சக பணியாளர்களிடம் அவ்வப்போது அடிக்கும் லூட்டியும், தனது மனைவி (களை) எப்படி திருமணம் செய்து கொண்டு வந்தேன் என்று நகைச்சுவையாக விளக்குவதும் இரசிக்க வைக்கின்றன.

கமலின் மகனாக வரும் பையனும் தனது கைத்தொலைபேசி காதலையும், புத்திசாலித் தனத்தையும் காட்டும் இடத்திலும், சில காட்சிகளிலும் இரசிக்க வைக்கின்றான்.

கிஷோர், திரிஷாவுக்கு வாய்ப்புகள் அதிகம் இல்லையென்றாலும், தங்களுக்கு கிடைத்த நேரத்திற்குள்-வாய்ப்புக்குள் சிறப்பாகவே நடித்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.

Thoongavanam-Kamal-Thrishaதிரிஷா கமலுடன், பாய்ந்து கட்டிப்பிடித்து, அவரது கழுத்தை தனது இரண்டு கால்களின் பிடிக்குள் கொண்டுவந்து, நெருக்கி – கிளுகிளுப்பாகி விடாதீர்கள் அப்படிப்பட்ட காதல் காட்சிகளா என்று! அந்த அளவுக்கு ஒரு சண்டைக் காட்சியில் ‘நெருக்கமாக’ கமலுடன் மோதியிருக்கின்றார் திரிஷா.

இறுதிவரை தமிழ்ப்படத்திற்கான எந்தவித சமரசத்தையும் செய்துகொள்ளாமல் கமலின் உதவியாளர் இயக்குநர் எம்.ராஜேஷ் படத்தைக் கொடுத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

ஒளிப்பதிவாளர் சானு வர்கீஸ். படத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வெளிச்ச மழையில் விளையாடியிருக்கின்றார். ஒரே கட்டிடத்தில், சமையலறையைக் காட்டும்போது பிரகாசமாகத் தெரியும் காட்சிகள், அதே கட்டிடத்தின், கழிவறை, நடன அரங்கங்கள் என்று வரும் காட்சிகள் மங்கலான, குறைந்த விளக்கொளியில் படம் பிடிக்கப்பட்டு வித்தியாசங்கள் காட்டப்பட்டிருக்கின்றன.

கமலஹாசனின் ஆஸ்தான இசையமைப்பாளராகிவிட்ட ஜிப்ரான்தான் இதிலும் இசை. பாடல்கள் இல்லை என்றாலும், பின்னணி இசையில் ரசிக்க வைத்திருக்கின்றார்.

நறுக்கான, கூர்மையான வசனங்களுக்குச் சொந்தக்காரர் சுகா. பாபநாசம் படத்தில் கமலுடன் இணைந்தவர் இதிலும் இணைந்திருக்கின்றார்.

பலவீனங்கள் – குறைகள்

படத்தின் முதல்பாதி வரை விறுவிறுப்பு, வித்தியாச கதைக்களம், திருப்பங்களுடன் கூடிய சம்பவங்கள் என சூப்பர் வேகத்தில் பயணிக்கும் படம் இடைவேளைக்குப் பிறகும் அதே இரவு விடுதிக்குள் கழிவறை, சமையல் பகுதி, டிஸ்கோ நடன அரங்கு, சத்தமான பாட்டுச் சூழல், பிரகாஷ் ராஜ் அறை என ஒரே வட்டத்திற்குள் வளைய வருவது கொஞ்சம் சோர்வடைய வைக்கின்றது. படத்துக்கும் தொய்வைத் தருகின்றது.

பாடல் காட்சிகள், நகைச்சுவை – இவையெல்லாம் இல்லாத கதைக் களத்தில் இப்படி ஒரே இடங்களைச் சுற்றி திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதுதான் ஒரு பெரிய குறையாகப் படுகின்றது. ஆனால், கதையின் களமும் அதுதான் என்பது வேறுவிஷயம்.

படத்தின் ஆரம்பம் முதல் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் ஆங்கிலப் பட பாணியில் உயர்ந்த ரக கோட்டுடன்தான் வலம் வருகின்றார்கள். அதுதான் கொஞ்சம் கண்ணை உறுத்துகின்றது. வெளியிடப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இந்தியப் போலீஸ்கார உயர் அதிகாரிகள் அப்படியா உடுத்திக் கொண்டு வருகிறார்கள்?

மற்றபடி கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு பார்த்தாலும் குறைசொல்லுபடியாக எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த அளவுக்கு நேர்த்தியாக அமைந்திருக்கின்றது படம்.

படத்தின் இறுதிக் காட்சியில் படம் படமாக்கப்படும் காட்சிகளைக் காட்டிய வண்ணம், ஒரே ஒரு பாடல் இடம் பெறுகின்றது.

படம் முழுக்க ஒரே பதட்டம், நெருக்கடி என்பதால் அந்தப் பாடலை நகைச்சுவையாக எடுத்திருக்கின்றார்கள்.

ஆங்கிலப் படத்திற்கு எதிராக படத்தை எடுத்து தங்களாலும் அப்படி முடியும் எனக் காட்டி விட்டார்கள் கமல் குழுவினர். அதற்காகவும், கமல் பிரகாஷ்ராஜ் நடிப்புக்காகவும் கண்டிப்பாக பார்த்து மகிழவேண்டிய படம் ‘தூங்காவனம்’!

– இரா.முத்தரசன்