இஸ்லாமாபாத், மார்ச்.13- பாகிஸ்தான் அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் அணு விஞ்ஞானி ஏ.கியூ. கானையும் ஈடுபடுத்த தலிபான்கள் விரும்புகின்றனர்.
பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டுள்ள “தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்’ என்ற பயங்கரவாத அமைப்பை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசு அழைத்துள்ளது.
இதையடுத்து அமைதிப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தர்களாக செயல்படுபவர்களின் பட்டியலை தலிபான்கள் தயாரித்துள்ளனர்.
அந்தப் பட்டியலில் இன்னும் சிலர் சேர்க்கப்படவுள்ளனர். அந்தச் சிலரில் பாகிஸ்தான் அரசால் அவமதிக்கப்பட்ட அணு விஞ்ஞானி கான், தலிபான்களின் நம்பிக்கையை பெற்ற மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் மக்தூம் அமீன் ஃபாஹிம் ஆகியோரின் பெயரை சேர்க்க முடிவு செய்துள்ளனர்.
நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் தான் ஈடுபடத் தயார் என்று கான் ஏற்கெனவே தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
தலிபான்கள் ஆயுதங்களை கைவிட்டு அமைதிப் பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று அரசு வலியுறுத்தி உள்ளது. ஆனால் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக ஆயுதத்தை கீழே போட முடியாது என, தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.